8 மார்ச், 2010

துருக்கியில் பாரிய பூகம்பம் : 57 பேர் பலி; 50க்கு மேற்பட்டோர் படுகாயம்!

துருக்கியின் மேற்குப் பகுதியின் இலாசிக் மாகாணத்தில் கோவன்சிலர் மாவட்டத்தில் அட்குலர் மற்றும் யுகாரி கனாட்லி ஆகிய கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பாரிய பூகம்பத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பத்தால் வீடுகள் குலுங்கின. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களுக்கு ஓடி வந்தனர். பீதி அடங்காமல், நீண்ட நேரம் வீதிகளில் அமர்ந்திருந்தனர்.

பூகம்பம் ரிச்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக துருக்கியின் காந்திலி பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாஸ்யுர்த்- கரகோகனை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூகம்பத்தினால் வீடுகள் இடிந்ததில் 57 பேர் பலியானதாகவும், 50க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பூகம்பம் கடுமையாக இருந்ததால் இறப்பு எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

துருக்கியில் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7.4 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 18 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக