2 ஏப்ரல், 2011

தனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம் அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பு




தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் அடுத்த மாதம் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட வுள்ளதாக தொழிலமைச்சு தெரிவித்தது.

தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹேலா இது தொடர்பில் தெரிவிக்கை யில், மேற்படி ஓய்வூதியத்திட்டத்திற்கான ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆய்வுகளுக்கு உட்படுத் தப்பட்டு வருவதுடன் மே மாதம் அதனைச் சட்ட மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியம் போன்று தனியார் துறையினருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படுமென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்திருந்தார்.

இதற்கமைய தொழிலமைச்சு மேற்படி தனியார்துறை ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களைத் தயாரித்துள்ளதுடன் இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதத்தில் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தொழிலமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு ஜப்பான் ரூ. 468 மில்லியன் உதவி






இலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 468 மில்லியன் ரூபா நிதியை வழங்குகின்றது.

இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வு நிதியமைச்சில் நடைபெற்றதுடன் ஜப்பானிய அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான ஜப்பானிய உயர் ஸ்தானிகர் குனியோ டகாஸியும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். குறைந்த வசதிகளைக் கொண்ட விவசாயிகளுக்கு விவசாய இயந்திர உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஜப்பானிய அரசு இந்நிதியுதவியை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.

ஜப்பானிய சுய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் இந்த 468 மில்லியன் ரூபா நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் வழங்கப்படும் இயந்திர உபகரணங்கள் கமநல சேவைகள் திணைக் களத்தின் கமநல சேவை மத்திய நிலையங் களுக்கூடாக விவசாயிகளுக்கு கையளிக்கப்பட வுள்ளதுடன் விவசாயத் திணைக்களத்தினூ டாக அரசாங்கத்தின் விதை உற்பத்திப் பண்ணைகளுக்கும் வழங்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்படும் இயந்திர உபகரணங்களின் பெறுமதியில் ஒரு பகுதி நிதி மத்திய வங்கியின் விசேட கணக்கொன்றில் வைப்பிலிடப்பட வுள்ளதுடன், இந்நிதி உணவு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கை களுக்காக உபயோகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரச வைத்தியசாலைகளில் தனியார் வாட் வசதிகள் உடனடியாக அமுல்படுத்த திட்டம் அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்தது




உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பிரதான அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் அறவிட்டு சேவை வழங்கும் தனியார் வாட் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 30 ஆம் திகதி அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தனியார் வைத்தியசாலைகள் பொது மக்களிடம் அசாதாரமான முறையில் கட்டணங்களை அறவிடுவதாகவும், அவற்றிற்கிடையே நிலையான கட்டண முறையொன்று இல்லையெனவும், அதனால் நியாயமான விலையில் சேவையினைப் பெற்றுக்கொள் ளக்கூடிய வகையில் அரசாங்க வைத்திய சாலைகளில் தனியார் வாட்டுக்களை நிர் மாணிக்குமாறு நீண்டகாலமாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

(பொதுமக்களின் இவ்வகையான கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண் டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார். கொழுபிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இந்த வசதியினை இவ்வாண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பிரதான வைத்திய சாலைகளிலும் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு புதிதாக கட்டடத் தொகுதிகளை அமைக்க உள்ளதாகவும், இதன் ஆரம்ப நிகழ்வு அம்பாறை பெரிய ஆஸ்பத்திரி யிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு சர்வதேச கீர்த்தியைப் பெற்றுத் தந்த முரளிதரனை இன்று நாம் தேசிய வீரராக கெளரவிப்போம்




உலக சாதனை படைத்து சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்த முத்தையா முரளிதரன் என்ற மாவீரனை இன்று இலங்கை மக்கள் அதி உன்னத நிலையில் வைத்து கெளரவிப்பார்கள். விளையாடும்போது ஏற்பட்ட சிறிய உபாதையையும் பொருட்படுத்தாமல் இந்த சாதனையாளர் முரளிதரன் தாய் நாட்டுக்காக இன்று களமிறங்குவார் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று நாடெங்கிலும் ஒரு கிரிக்கெட் விழாவைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. எமது வீரர்கள் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடெங்கிலும் வாண வேடிக்கைகளும் பட்டாசுகளும் கொளுத்தி மக்கள் ஆனந்தப் பூரிப்படைவார்கள். அது போன்றே எங்கள் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்ரிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் வெடிகள் கொழுத்தப்படுமென்று நாட்டின் பல பகுதியில் ஒழுங்குகள் செய்யப் பட்டிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்தன. இன்றைய இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றாலும் அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றாலும் தங்கு தடையின்றி வெற்றிவிழா இலங்கையில் பல நாட்களுக்கு நடைபெறுமென்றும் அறிவிக்கப்படுகிறது.

நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெற்றிப்பூரிப்பில் வீதியிறங்கி இன் சுவைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை அணியினது பதாதைகளும், முத்தையா முரளிதரனின் பதாதைகளும் நாட்டிலுள்ள பிரதான நகரங்களில் வைப்பதற்கான நடவடிக் கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள இலங்கை - இந்திய அணிகள் மோதல்




10 ஆவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி மும்பை வென்கடே அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை - இந்திய அணிகள் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்க வுள்ளன. இதில் 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியனான இலங்கை அணியும் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியும் இரண்டாவது தடவையாக கிண்ணத்தை சுவீகரிக்க களமிறங்கவுள்ளன.

உலகக் கிண்ண தொடரின் ஆரம்ப சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் சரிசமமான திறமையை வெளிக்காட்டியுள்ள இவ்விரு அணிகளும் இன்றைய இறுதி ஆட்டத்தில் கிண்ணத்தை வெல்ல கடைசிவரை போராடும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் கட்டாயம் பங்கேற்க முயல்வார் என மும்பையில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். எனினும் இறுதிப்போட்டியில் விளையாடும் 11 பேர் அணி, கள நிலவரங்களை பொறுத்து தேர்வு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் விளையாடும் கடைசி சர்வதேச ஆட்டமாக இது அமையவுள்ளது. இதேவேளை இலங்கை அணியின் சகலதுறை வீரர் அன்ஜலோ மத்தியூஸ் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ்ரன்தீவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்தியூஸ் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் காயத்திற்கு உள்ளானார். இதனால் அவர் அந்தப் போட்டியில் ஓட்டம்பெற மேலதிக வீரர் ஒருவரின் துணையுடனேயே துடுப்பெடுத்தாடினார்.

இந்நிலையில் மத்தியூஸணுக்கு பதில் ரன்தீவை அணியில் இணைப்பதற்கு ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

இலங்கை அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரன்தீவ் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியில் முரளி, மெண்டிஸ், ரங்கன ஹேரத் என மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஷிஷ் நெஹ்ராவும் காயத்திற்கு உள்ளாகியுள்ளார். நெஹ்ராவின் விரல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மும்பை பொலிஸாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கொமாண்டோக்கள் இந்திய மத்திய துணை இராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஒன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை மராட்டிய மாநில மேலதிக பொலிஸ் ஆகியோர் வான்கடே மைதான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வான்வழி பாதுகாப்புக்காக மும்பை அருகில் உள்ள இந்திய கடற்படை தளம், விமானப்படை தளம் மற்றும் கட லோர காவல் படை தளம் ஆகியவை எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. கடற்படை கொமாண்டோ படையும், ஹெலிகொப்டர்களும் தயாராக இருக்கின்றன. மேலும் மைதானம் அருகே விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வான்கடே ஸ்டேடியத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங் களுக்காக மைதானம் அமைந்துள்ள பகுதியின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்திற்கு வரும் ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வார்கள். மைதானத்தை சுற்றியுள்ள வளையத்தில் மராட்டிய மாநில மேலதிக பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மும்பை பாதுகாப்பு பணிகளுக்காக நவிமும்பை மாநகர பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள்.

வான்கடே மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் 180க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த காமராக்கள் மூலம் ரசிகர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு பொலிஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கும்.

உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பைனாகுலர், கமரா. சிகரெட் பற்ற வைப்பதற்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள், பைகள் உள்ளிட்டவை கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர்.

வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனங்களை மோதி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளதால் வான்கடே மைதானத்தைச் சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

மைதான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில உள்துறை அமைச்சர் ஆர். ஆர். பாட்டீல் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். அவருடன் மும்பை மாநகர பொலிஸ் ஆணையர் அருப் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சென்றிருந்தனர்.

கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடல்சார் பொலிசார் மற்றும் கடலோர பாதுகாப்பு பொறுப்பான மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடற்படை போர்க் கப்பல்களும், விமானங்களும் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளை இடைவிடாமல் கண்காணித்து வருகின்றன.

இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விரைவாக தாக்கும் கப்பல், ரோந்து சுற்றும் கப்பல், எதிரிகளை விரைவாக இடைமறிக்கும் கப்பல் தொடர்ச்சியாக கடலோர பகுதிகளில் ரோந்து வருகின்றன.

கடற்கரை பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அவர்களை பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

1 ஏப்ரல், 2011

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் ஆணைக்குழுவின் செயற்பாடு நீடிப்பு



கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை மேலும் மூன்று மாதங்களினால் நீடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவித்தன.

எனினும் இது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சார்பில் அரசாங்கத்திடம் இதுவரை கோரிக்கை விடுக்கப்பட்டதா? என்ற விடயம் உறுதிபடுத்தப்படாமல் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை ஒரு வருடத்தினால் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அவ்வாறு நீடிப்புக்கோரிக்கையை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கவில்லை என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது அதன் சேவைக்காலத்தை மேலும் மூன்று மாதங்களினால் நீடிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவித்தன.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தனது இறுதி பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நோக்கில் செயற்பட்டுவருகின்றது.

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் கொழும்பிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாரிக்கும் நோக்கில் பெறப்பட்ட சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர் உட்பட ஆஸி.யில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது

இலங்கையர்களும் அங்கம் வகிக்கும் கடனட்டை மோசடிக் கும்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் கைது செய்யப்பட்டது.

சுமார் 56 பேரைக் கொண்ட இந்த மோசடிக் கும்பலில் பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து சென்றிருப்பவர்களும் உள்ளடங்குவதாக அவுஸ்திரேலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிலையங்களில் பணியாற்றுமிலங்கையர்களைப் பணத்தைக் கொடுத்து வளைத்தெடுத்து அவர்கள் மூலம் கடனட்டைத் தகவல்களைத் திருடுவதில் பிரஸ்தாப கும்பல் ஈடுபட்டுள்ளது.

அதன்மூலம் அவுஸ்திரேலியாவில் பரந்த கடனட்டை மோசடி வலையமைப்பொன்றை உருவாக்க அவர்கள் முயன்றுள்ளனர்.அவ்வாறான மோசடிகள் மூலம் அவர்கள் இதுவரை 25.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியாக உழைத்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களிடம் இருந்த அறுபத்து மூவாயிரம் கடனட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாவில் இரவு 9 மணிக்கு பின்னரும் சோதனை தொடரும்

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் இனிமேல் இரவு 9 மணிக்குப் பின்னரும் நீடிக்கும் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சர்வ மதத் தலைவர்கள்குழுவினருடனான சந்திப்பின் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை காலமும் இரவு 6 மணிக்கு ஆரம்பமாகும் இரக்ஷிணுவத்தினரின் வீதிச் சோதனைகள் இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றுவிடும்.அதன் பின்னர் செல்லும் வாகனங்களோ மோட்டார் சைக்கிள்களோ மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதில்லை.

குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட களவுகளும் கொலைகளும் பெரும்பாலும் பின்னிரவுகளிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதேவேளை நெடுந்தூர வாகனங்களும் இரவு 9 மணிக்குப் பின்னரே யாழ்.குடாநாட்டுக்குள் நுழைகின்றன.

இது தொடர்பாக பல தரப்பட்டவர்களாலும் இராணுவத்தினரிடம் எடுத்துக்கூறப்பட்டபோதும் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட நேரம் மட்டுமே வீதிச் சோதனை மேற்கொண்டு வந்தன. இதனையடுத்தே சோதனை நடவடிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே எந்தப் பேச்சும் அமையவேண்டும்: ஹெல உறுமய

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வகையான பேச்சுக்களை நடத்தினாலும் மக்கள் ஆணை வழங்கியுள்ள மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே அவை இருக்கவேண்டும். அதனை மீறி எதனையும் செய்ய முடியாது. மக்களின் ஆணையை தமிழ்க் கூட்டமைப்பும் மதிக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதியும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை தோல்வியடைந்துவிட்டது. மக்கள் சபைகளே சிறந்த முறைமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியதாவது,

அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேச்சுக்களை நடத்திவருகின்றது. ஆனால் அந்த பேச்சுக்கள் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே இடம்பெறவேண்டும் .

காரணம் நாட்டின் அதிகளவான மக்கள் ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கே ஆணை வழங்கியுள்ளனர். அதனை அனைவரும் மதிக்கவேண்டியது அவசியமாகும்.

அரசியல் தீர்வு அல்லது எவ்வக்ஷிறான செயற்பாடாக இருந்தாலும் அது மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை மீறிச் செல்லக்கூடாது. சகல பிரிவினரினதும் சம்மதத்துடனேயே அனைத்து விடயங்களும் இடம்பெறவேண்டும். மேலும் இந்தியா எம்மீது சுமத்திய மாகாண சபை முறைமையானது தோல்விகண்டுள்ளது என்றே நாங்கள் கூறுகின்றோம். எதிர்பார்த்த விடயம் மாகாண சபை முறைமையில் கிடைக்கவில்லை.

எனவே உள்ளூராட்சிமன்றங்களை அடிப்படையாகக்கொண்டு கிராம சேவை பிரிவுகளை இணைத்து மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் சபைகள் என்ற வேலைத்திட்டமே சிறந்த தீர்வுத்திட்டமாக எதிர்காலத்தில் அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.

எனவே நாங்கள மக்கள் சபைகள் என்ற விடயத்துக்கே செல்லவேண்டும். அந்த வேலைத்திட்டத்தை ஊக்குவித்து விரைவில் நாடளாவிய ரீதியில் மக்கள் சபைகளை அமைத்து கிராம்ஙகளின் அபிவிருத்திக்காக செயற்படவேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கம் கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே அதிகளவில் கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான சந்திப்புக்கள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிக வெற்றிகளை ஈட்டிக்கொண்டுள்ளது. அதாவது மக்கள் அந்தக் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

எனவே இதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும். வெறுமனே பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் செயற்பட்டு தீர்மானங்களை எடுக்கவேண்டியது அவசியமாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை அரசாங்கம் மதித்து அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஏற்கனவே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அறிகின்றோம். பேச்சுக்கள் ஆக்கபூர்வமாக அமையவேண்டும். அரசியல் தீர்வு தொடர்பில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.
மேலும் இங்கே தொடர்க...