12 ஜூன், 2010

காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மீள் உற்பத்தி முதலீடுக்கு ஆஸி. உதவும் அமைச்சர் றிஷாடிடம் உயர்ஸ்தானிகர் உறுதி

யுத்தத்தால் அழிந்துபோன காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் உற்பத்திக்கான முதலீடுகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பங்களிப்பை செய்யவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் உயர் ஸ்தானிகர் கெதி க்ளுமன் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில், வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே, உயர் ஸ்தானிகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தற்போது இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்குமிடையில் காணப்படும் வர்த்தக செயற்பாடுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துறையை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது குறித்தும் இச்சந்திப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்வலு, கல்வி துறைகளில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கையில் காணப் படும் புதிய முதலீட்டு துறைகள் குறித்து அறிவுறுத்திய அமைச்சர், வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீட்டு ஊக்குவிப்புக்களுக்கான சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளதால், அவுஸ்திரேலியா வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கான முனைப்பை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடத்தில் விடுத்த வேண்டுகோளை, தாம் அது குறித்த கவனத்தை செலுத்துவதாக உயர் ஸ்தானிகர் உறுதியளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு பல்கலையின் திருமலை வளாகம்: சித்த மருத்துவ பீடத்தை மாற்றும் தீர்மானம் மறுபரிசீலனையில்

கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலம் இயங்கி வந்த சித்த மருத்துவ பீடத்தை அங்கிருந்து மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார துறை அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

திருகோணமலை வளாகத்தின், கோணேசர்புரியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் ஏறத்தாள 40 இற்கும் அதிகமான மாணவர்கள் கற்கை நெறியை இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

மிக அண்மையில் உயர் கல்வி அமைச்சு மேற்படி பீடத்தை இங்கிருந்து மாற்றுவதற்கு தீர்மானித்தது. இதனை அடுத்து பீடத்தை மாற்ற வேண்டாம் என மாணவர்கள் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை உயர் கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கும் விடுத்திருந்தனர்.

மாணவர்களின் கோரிக்கை தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தமது அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் சாதகமான முறையில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாகவும் உயர் கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சருக்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

உரமானியம் வழங்குவதற்கு 81,365 மில்லியன் ரூபா செலவு அமைச்சர் மஹிந்த யாப்பா

உரமானியம் வழங்குவதற்காக கடந்த ஐந்து வருடத்தில் அரசாங்கம் 81,365 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.

வாய் மூல விடைக்காக ரவி கருணா நாயக்க எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2005 இல் 6,285 மில்லியன் ரூபாவும் 2006 இல் 10,696 மில்லியன்களும் 2007 இல் 10,998 மில்லியன் ரூபாவும் 2008 இல் 26,449 மில்லியன் ரூபாவும் 2009 இல் 26,935 மில்லியன்களும் செலவிடப்பட்டுள்ளன. நெல், உப உணவுப் பொருட்கள், மரக்கறி, தேயிலை, றப்பர், தெங்கு என் பவற்றுக்கு உரமானியம் வழங்கப்படுகிறது.

இதன்படி, கடந்த வருடம் யாழ். மாவட்டத்துக்கு 3,921 மில்லியன் ரூபாவும் மன்னார் மாவட்டத்துக்கு 1,639 மில்லியன் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு 4,114 மில்லியன் ரூபாவும் திருமலை மாவட்டத்திற்கு 17,315 மில்லியன் ரூபாவும் மட்டு. மாவட்டத்துக்கு 18,984 மில்லியன்களும் அம்பாறை மாவட்டத்துக்கு 55,470 மில்லியன்களும் பசளை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுடன் அரசியலில் ஈடுபட்ட படைவீரர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு




ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர்.

இராணுவத்தில் முக்கிய பதவிகளில் வகித்த ஓய்வுபெற்ற படை வீரர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தொகுதி அமைப்பாளர்க ளாக, மாவட்ட இணைப்பாளர்களாக பல பதவிகளை வகித்து வந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்ந்தும் இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்த அவர்கள் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பியினரின் கைப் பொம்மையாக செயற்படுகிறார். நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களின் நலன் பற்றியோ சிந்திக்காமல் செயற்படுகிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு: 2010 முதற்காலாண்டில் 890 மில். டொலர் வருமானம் ஆண்டு இறுதியில் 4 பில். டொலர் இலக்கு





மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் சென்றுள்ளதன் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வெளிநாட்டு செலாவணியாக 890 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 67,136 பேர் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளனர். 2009 முதல் காலாண்டில் இத்தொகை 54,990 பேராகவே இருந்தது. இது 22 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டை விட 2010 ஆம் ஆண்டில் கட்டார், குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

கட்டாரிலிருந்து 72 வீதமும், குவைத்திலிருந்து 32 சதவீதமும், ஜோர்தானிலிருந்து 28 சதவீதமும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 11 சதவீதமும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அத்துடன் பஹ்ரேய்ன், மலேஷியா போன்ற நாடுகளிலும் வேலை வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன. கொரியாவிலிருந்தும் 2600 வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

2009 ஆம் ஆண்டைவிட 2010 ஆம் ஆண்டு கிடைத்துள்ள அந்நிய செலாவணியை ஒப்பிடும்போது 14 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது. 2009 முதல் காலாண்டில் 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 2010 ஆம் ஆண்டு இத்தொகை 890 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.

2010ஆம் ஆண்டு இறுதியில் வெளி நாட்டில் வேலைவாய்ப்பை பெற் றுச் சென்றவர்களினூடாக 4 பில்லி யன் அமெரிக்க டொலர்களை பெற் றுக்கொள்ளும் இலக்கை நோக்கியே பணியகம் செயற்படுகிறது எனவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

10 ஜூன், 2010

ஜனாதிபதி - சோனியா டில்லியில் நேற்று சந்திப்பு




இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

புதுடில்லி மயூரா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோர் பங்கு கொண்டனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் நீண்டகாலமாக நிலவும் நல்லுறவை மேலும் பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கு சோனியா காந்தி குறிப்பிட்டார்.

இலங்கை சகல துறைகளிலும் அபிவிருத்தியடைந்து வருவதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையிலான உல்லாசப் பிரயாணத்துறையை மேலும் முன்னேற்ற நல்ல தருணம் உருவாகியுள்ளதென்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி இரண்டாவது முறையாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சோனியா, இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

குருநாகலில் விஷவிதை உண்ட 12 மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

குருநாகல் மாவட்டத்தில் ஒருவகை விஷ விதைகளை உண்ட 12 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

பிங்கிரியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் இரு கட்டங்களில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டதாக வைத்திய அதிகரி உபாலி சிங்க தெரிவித்தார்.

இவர்களில் ஒரு மாணவியும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

வாந்தி, மயக்கம், வயிற்றுவலி போன்ற உபாதைகளால் இவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி நோக்கி 300 இலங்கையருடன் செல்லும் 'எம்வி சன் சீ' : சர்வதேசம் தகவல்

இலங்கை அகதிகள் சுமார் 300 பேர் இருக்கலாம் என நம்பப்படும் கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அகதிகள் புகலிடம் கோரும் நோக்கில் சென்று கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்த கப்பல் தாய்லாந்து-வியட்நாமிய கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருப்பதாக த அவுஸ்திரேலியன் செய்திதாள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்த கப்பலில் புகலிடம் கோருவோரை, அழைத்துச் செல்பவர்களே முன்னர் கனடாவுக்கு 76 இலங்கையர்களை அழைத்து சென்றவர்களாவர் என சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த ஏற்பாட்டாளர்கள் பிரின்சஸ் ஈஸ்வரி அல்லது ஒசியான் லேடி என்ற கப்பலில் 76 பேரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

'எம்வி சன் சீ' எனப்படும் இந்தக் கப்பல் பிலிப்பைன்சின் கடற்கரை பகுதியிலும் தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் இது தொடர்பில் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை.

எனினும் இவ்வாறான நடவடிக்கை ஒன்று குறித்து தமது அரசாங்கம் அறிந்துள்ளதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இவ்வாறான கப்பல் ஒன்றின் வருகை குறித்துத் தாமும் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள கனடாவின் அதிகாரிகள் தமது கடற்படை இது தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் அரசமைப்பில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம் : லக்ஷ்மன் யாப்பா

நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரத்ன முன்வைத்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அந்தவகையில் துரித கதியில் கட்டம் கட்டமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: "அரசாங்கம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது. அந்த வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. .

கடந்தகாலங்களில் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் காரணமாக அபிவிருத்திகளை மேற்கொள்வதில் பல்வேறு தடைகள் காணப்பட்டன. மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர். .

தற்போது 30 வருடகால பயங்கரவாதம் முடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பாகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. .

அங்கீகாரம்.

அந்தவகையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் யஐஐ அ, லஐ, லயஐஐஐ அ, ஆகிய அத்தியாயங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கும் புதிய திருத்தங்களை முன்வைப்பதற்கும் அடையாளம் காணப்பட்ட சட்டங்களுக்குத் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளவும் இது தொடர்பான சட்ட வரைவுகளை செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. .

அமைச்சரவை உபகுழு.

அதேவேளை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படுகின்ற நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவற்றை நீக்குவதற்கான யோசனைகள் என்பன தொடர்பில் ஆராய அண்மையில் அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இடம்பெறுகின்றேன். தற்போது குறித்த குழு பல தடவைகள் கூடி யோசனைகளை தயாரித்து வருகின்றது. சில வாரங்களில் நாங்கள் இது தொடர்பான யோசனைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்போம்.

சல்மான்கானின் திரைப்படம் இலங்கையில்

மேலும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தியதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. அதாவது வேறு ஒரு நாட்டில் படப்பிடிப்புக்களை மேற்கொள்ளவிருந்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் திரைப்படம் தற்போது முழுமையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. 150 இந்திய குழுவினர் இலங்கையில் படப்பிடிப்புக்களை நடத்துவார்கள்."இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரளித்த பதில்களும் : கேள்வி: எவ்வாறான அம்சங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கூற முடியுமா?

பதில்: பல விடயங்களில் திருத்தங்கள் இடம்பெறும். அவற்றை விபரமாக தற்போது என்னால் கூற முடியாது. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தேர்தல் முறைமை உள்ளூராட்சி முறை போன்றவற்றில் திருத்தங்கள் இடம்பெறவுள்ளன.

கேள்வி : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எவ்வாறு திருத்தம் செய்யப்படும்?

பதில்: அதாவது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்கு ஒருதடவை நாடாளுமன்றத்துக்கு வரவேண்டிய வகையில் திருத்தம் செய்யப்படும். தற்போது அவ்வாறு இல்லை.

கேள்வி: ஜனாதிபதி பதவிக்கால தடவைகளை நீடிப்பது தொடர்பில் ஆராயப்படுகின்றதா?

பதில்: ஒருவர் எத்தனை தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பதனை மக்களே தீர்மானிக்கின்றனர். எனவே அதில் சிக்கல்கள் இல்லை. யார் ஜனாதிபதியாயானலும் மக்களே தீர்மானிக்கின்றனர்.

கேள்வி:அரசியல் தீர்வு விடயமும் அரசியலைமைப்பு திருத்தங்களில் உள்ளடக்கப்படுமா?

பதில்: அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பேசப்படுகின்றது

கேள்வி: எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தாரே?

பதில்: மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று நான் கூறவில்லை. அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பேசப்படுவதாகவே கூறினேன். இதில் பல்வேறு விடயங்கள் உள்ளன.

கேள்வி: அப்படியானால் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு?

பதில்: நாங்கள் முதற்கட்டமாக வடக்கில் மாகாண சபையை நிறுவவுள்ளோம்.

கேள்வி:: அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஏதாவது பேசப்படுகின்றதா?

பதில்: நாங்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுவருகின்றோம். அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவருகின்றோம். உலகில் எங்குமே இடம்பெறாதவாறு இடம்பெயர்ந்த மக்கள் மிகவேகமாக மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

கேள்வி: அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான குழுவினரின் யோசனைகளுக்கா தற்போது அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது?

பதில்:அந்தக் குழுவும் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கேள்வி:மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாகவும் பேசப்படுகின்றதா?

பதில்: பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த தமிழர்கள் 3 மாதங்களில் குடியமர்த்தப்படுவர்: ராஜபட்ச உறுதி



குடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை அதிபர் ராஜபட்ச தம்பதியை புதன்கிழமை வரவேற்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்.
புது தில்லி, ஜூன் 9: இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் 3 மாதங்களுக்குள் அவரவர் வசிப்பிடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதி அளித்தார்.

÷3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் ராஜபட்சவை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதன்கிழமை காலை சந்தித்தது. அப்போது அவர்களிடம் ராஜபட்ச மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.

÷திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் உள்பட மொத்தம் 14 எம்.பி.க்கள் ராஜபட்சவை சந்தித்து மனு அளித்தனர்.

÷இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் டி.ஆர். பாலு கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு செல்லமுடியாமல் முகாமில் அடைபட்டுள்ளனர். அவர்களை உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி - ஜயவர்த்தனே இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சி அதிகாரம் வழங்குவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது.

÷அதற்கு பதிலளித்த ராஜபட்ச, அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது முகாமில் 54 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் அதாவது பருவமழை தொடங்குவதற்கு முன்பு அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் அவர் உறுதி அளித்தார் என்றார்.

÷தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பான கோரிக்கையில் ராஜபட்ச நம்பிக்கை தரும் வகையில் உறுதியான பதிலை அளிக்காததால் எம்.பி.க்கள் குழுவினர் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

÷இதனிடையே குழுவில் இடம்பெற்றிருந்த திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தமிழர்களுக்கு சுய அதிகாரம் வழங்குவது தொடர்பான 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து யோசனை செய்துவருவதாகவும் ராஜபட்ச தெரிவித்ததாக அவர் கூறினார்.

÷இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.500 கோடி நிதியை இலங்கை அரசு முறையாக பயன்படுத்தாமல் உள்ளது. அந்த நிதியை உடனடியாக வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட முன்வர வேண்டும் என்று ராஜபட்சவிடம் எம்.பி.க்கள் குழுவினர் வலியுறுத்தினர்.

முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜபட்ச சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையே நீண்ட நல்லுறவு ஏற்படவும், எதிர்காலத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தியதாக சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

÷இரு நாடுகளின் மீனவர்களிடையே அடிக்கடி மோதல்களை தடுத்து, நல்லுறவை ஏற்படுத்துவது மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பேச்சு நடத்த கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்று நிருபமா ராவ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...