10 ஜூன், 2010

இடம்பெயர்ந்த தமிழர்கள் 3 மாதங்களில் குடியமர்த்தப்படுவர்: ராஜபட்ச உறுதி



குடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை அதிபர் ராஜபட்ச தம்பதியை புதன்கிழமை வரவேற்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்.
புது தில்லி, ஜூன் 9: இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் 3 மாதங்களுக்குள் அவரவர் வசிப்பிடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதி அளித்தார்.

÷3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் ராஜபட்சவை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதன்கிழமை காலை சந்தித்தது. அப்போது அவர்களிடம் ராஜபட்ச மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.

÷திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் உள்பட மொத்தம் 14 எம்.பி.க்கள் ராஜபட்சவை சந்தித்து மனு அளித்தனர்.

÷இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் டி.ஆர். பாலு கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு செல்லமுடியாமல் முகாமில் அடைபட்டுள்ளனர். அவர்களை உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி - ஜயவர்த்தனே இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சி அதிகாரம் வழங்குவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது.

÷அதற்கு பதிலளித்த ராஜபட்ச, அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது முகாமில் 54 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் அதாவது பருவமழை தொடங்குவதற்கு முன்பு அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் அவர் உறுதி அளித்தார் என்றார்.

÷தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பான கோரிக்கையில் ராஜபட்ச நம்பிக்கை தரும் வகையில் உறுதியான பதிலை அளிக்காததால் எம்.பி.க்கள் குழுவினர் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

÷இதனிடையே குழுவில் இடம்பெற்றிருந்த திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தமிழர்களுக்கு சுய அதிகாரம் வழங்குவது தொடர்பான 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து யோசனை செய்துவருவதாகவும் ராஜபட்ச தெரிவித்ததாக அவர் கூறினார்.

÷இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.500 கோடி நிதியை இலங்கை அரசு முறையாக பயன்படுத்தாமல் உள்ளது. அந்த நிதியை உடனடியாக வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட முன்வர வேண்டும் என்று ராஜபட்சவிடம் எம்.பி.க்கள் குழுவினர் வலியுறுத்தினர்.

முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜபட்ச சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையே நீண்ட நல்லுறவு ஏற்படவும், எதிர்காலத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தியதாக சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

÷இரு நாடுகளின் மீனவர்களிடையே அடிக்கடி மோதல்களை தடுத்து, நல்லுறவை ஏற்படுத்துவது மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பேச்சு நடத்த கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்று நிருபமா ராவ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக