9 மார்ச், 2010

புலிகளின் சட்டப் பிரிவில் பணியாற்றிய பெண் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைப்பு

விடுதலை புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ் தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 78 பேர் கிறிஸ்மஸ் தீவருகே வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமது அகதி அந்தஸ்து கோரிக்கை அங்கீகரிக்கப்படும் வரை ஓஷியானிக் விகிங் கப்பலில் இருந்து இறங்குவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் 12 கிழமைகளுக்குள் இவர்களுடைய கோரிக்கை மற்றும் மீள் குடியேற்றம் குறித்து கவனம் செலுத்துமென உறுதியளித்திருந்தது.இவ் உறுதிமொழியை அடுத்து இலங்கை அகதிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி பெண்ணின் சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில்

"அவர் விடுதலை புலிகளின் நீதிமன்றம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றியிருக்கலாம்.எனினும் அவர் விடுதலை புலி உறுப்பினர் அல்லர்" எனத் தெரிவித்தார்.

மோதல் முடிவடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைகளுக்குக் கீழ் பணியாற்றுவதைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள் என ஏற்கனவே நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவதாக இப்பெண் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனது இரு பிள்ளைகள், தாய், மற்றும் சகோதரருடன் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கப்பல் மூலம் பயணித்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நைஜீரிய மதக்கலவரத்தில் 500 பேர் பலி : 95 பேர் கைது




நைஜீரியா நாட்டில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 500 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆபிரிக்காவில் உள்ளது நைஜீரியா. இங்கு பெருந்தொகையான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்களிடையே அடிக்கடி கலவரம் வெடிப்பது வழக்கம்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த கலவரத்தில் 550 பேர் பலியானார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இந்த 2 பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நகர் அருகே உள்ள கிராமங்களில் இந்த மோதல் சம்பவங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தன. ராட்சாட் மற்றும் ஜோட் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த ஒரு தரப்பினர்,வீடுகளுக்கு தீ வைத்தனர்.

அவர்கள் பெரோன் இனத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளையே தீ வைத்தனர். இந்த தாக்குதலை புலானி இனக்குழுவினர் நடத்தினார்கள். அவர்கள் 3கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினர்.

பழிக்குப் பழி

இது தொடர்பாக ஜோஸ் நகரின் புலானி இனக்குழுவைச் சேர்ந்த சுப் அல்காலி கூறுகையில்,

"இரு வாரங்களுக்கு முன் எங்கள் இனத்தினர் மீது எதிர் தரப்பினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக தான் இந்தத் தாக்குதல் நடந்தது" என்றார்.

தாக்குதல் நடந்த போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்து விட்டனர் என்றும் ஒரு பொலிஸ் அதிகாரியைக் கூட கலவரப்பகுதியில் காணவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

500 பேர் பலி

இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். பலர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இந்தக் கலவரத்தில் 100 பேர் பலியானதாக தான் முதல் கட்டத் தகவல்கள் வெளியாயின. ஆனால் இந்தத் தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை இப்போது 500 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என்று கூறப்படுகிறது.

நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்காலிக ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் கலவரத்தை ஒடுக்கும்படி இராணுவத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்தியா விருப்பம் ராஜபக்சேவிடம் நிருபமா ராவ் தெரிவித்தார்






யாழ்ப்பாணத்தில் புதிதாக துணைத் தூதரகம் அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நிருபமா ராவ் தெரிவித்தார்.

ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் 3 நாள் இலங்கை பயணத்தை முடித்து விட்டு நேற்று டெல்லி திரும்பினார்.

அதிபர் ராஜபக்சேவுடன் நிருபமா நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலக செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியதாவது:-

இந்திய தூதரகம்

இலங்கையில் தற்போது கொழும்பு நகரில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. மேலும் கண்டியில் ஒரு துணைத் தூதரகமும் உள்ளது. வடக்கு பகுதியில் நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகம் அமைப்பதற்கு இந்தியா விரும்புவதாக அதிபர் ராஜபக்சேவிடம் நிருபமா கூறினார்.

மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா உறுதுணையாக இருக்கும். இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்றும் நிருபமா ராவ் உறுதி அளித்தார்.

மேலும் 2008-ம் ஆண்டு மீன் பிடிப்பது தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புனரமைப்பு பணிகள்

மன்னார் பகுதியில் உள்ள புகழ்பெற்ற திருக்கேதேஸ்வரம் கோவிலை புதுப்பிக்கும் பணிகளில் இந்தியா ஈடுபடும் என்றும் தெரிவித்தார். அதற்கான பணிகளில் இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மகாபலிபுரம் சிற்ப கல்லூரியைச் சேர்ந்தவர்கள் விரைவில் அனுப்பப்படுவார்கள். மேலும், இலங்கையின் தலடா மலிகாவா என்ற இடத்தில் பன்னாட்டு புத்த மிïசியம் அமைப்பதற்கான முழு முயற்சிகளையும் இந்தியா எடுத்து வருவதாகவும் ராஜபக்சேவிடம் நிருபமா ராவ் கூறினார்.

அப்போது, புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் குறித்து ராஜபக்சே தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இலங்கை முகாம்களில் இன்னும் 70 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே இருப்பதாகவும் ஏராளமானோர் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாகவும் ராஜபக்சே கூறினார்.

இவ்வாறு விஷ்ணு பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எந்த விசாரணைக்கும் ஐ.நாவுக்கோ சர்வதேசத்துக்கோ இடமளியோம்:சம்பிக




இலங்கை தொடர்பான எந்தவொரு உள்ளக விசாரணையையும் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ சர்வதேசத்துக்கோ இடமளிக்க மாட்டோம். இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளமைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

எனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை அவரே எடுக்கவேண்டும் என்று சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை அமைப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நா. சாசனத்தை மீறிவிட்டார் என்றும் அவர் சொன்னார்.

அங்கத்துவ நாடு ஒன்றின் உள்விவகாரங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு ஆலோசனை கூறுவதற்காக ஆலோசனை குழு ஒன்றை நியமிப்பது ஐ.நாவை ஸ்தாபித்தவர்கள் தற்போதைய நிர்வாகத்திடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு செயல் அல்ல என்றும் கூறிய அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியபோது இலங்கை எந்தவொரு சர்வதேச அல்லது உள்ளூர் சட்டத்தையும் மீறாதபடியால் இத்தகைய ஆலோசனை குழுவொன்றை அமைப்பது குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

இலங்கை தொடர்பான எந்தவொரு உள்ளக விசாரணையையும் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ சர்வதேசத்துக்கோ இடமளிக்கமாட்டோம். அவ்வாறு இடமளிக்க முடியாது. ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்திலும் இந்த போக்கை நாங்கள் கடைப்பிடித்தோம். அதாவது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையாக எம்மிடம் வினவினால் நாங்கள் அதற்கு பதிலளிக்கத் தயாராக இருக்கின்றோம். மனித உரிமைகள் அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் விசாரணைகளுக்கு இடமில்லை.

எனவே இவ்வாறான சர்வதேச சதித்திட்டங்களுக்கு எதிர்வரும் எட்டாம் திகதி நாட்டு மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

மீண்டும் ஒருமுறை எமது நாட்டின் இறைமையை மீறும் வகையிலும் நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினரை களங்கப்படுத்தும் ரீதியிலும் சில தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

எமது நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறித்து நாங்கள் அவதானம் செலுத்தவேண்டும். இதற்கு முன்னர் பலஸ்தீனின் காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து இஸ்ரேல் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் இவ்வாறான ஆலோசனை குழுவை நியமித்திருந்தார்.

ஆனால் இன்று சில நாடுகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருகின்றன. ஈராக்கில் இதுவரை ஆறரை இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளனர். எனவே இந்த நாடுகளில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு காரணமான நாடுகள் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஏன் ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை நியமிக்கவில்லை?

எனினும் ஐ.நா. செயலாளருடனான தொலைபேசி உரையாடலின்போது விசேட நிபுணர் குழு விவகாரத்துக்கு எமது ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். இவ்வாறானதொரு தலைவர் எமக்கு கிடைத்துள்ளமை தொடர்பில் பெருமையடைகின்றோம். தற்போதைய நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டில் ஆட்சியில் இருந்திருந்தால் ஐ.நா. வின் .இந்த விடயம் தொடர்பில் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் இலங்கை தொடர்பில் விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேசத்தை வலியுறுத்தி வருகின்றன. மேலும் சில நாடுகளின் உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இலங்கை குறித்த விசாரணையை நடத்துமாறு கோருகின்றன. ஆனால் எந்தவொரு விசாரணைக்கும் இடமளிக்கமாட்டோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிரணி வேட்பாளர் வெளியிட்ட வெள்ளைக்கொடி சம்பந்தப்பட்ட விடயமே இவ்வாறான முயற்சிகளுக்கு காரணமாகும்.

மேற்குலக நாடுகள் பொருளாதாரத்தில் கடந்த வருடம் மறைபெறுமானத்தை அடைந்தன. ஆனால் எந்தவொரு ஆசிய நாடும் மறை பெறுமானத்துக்கு கடந்த வருடம் செல்லவில்லை. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகள் அபார வளர்ச்சியை பெற்றுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் குழுவை ஜனாதிபதி அல்லது இராணுவ தளபதி நியமிப்பார்



ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார் அல்லது அவரது ஆலோசனையின் பிரகாரம் இராணுவ தளபதி நியமிப்பார் என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் 22 பேர், ஆறு பொலிஸார் மற்றும் சிவிலியன்கள் ஆறுபேர் அடங்கலாக 35 பேர் சாட்சியமளித்துள்ளனர் என்றும் அவர் சொன்னார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது

இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களை நெறிப்படுத்தும் நடவடிக்கை முற்றாக நிறைவு பெற்ற நிலையில் அது தொடர்பான அறிக்கை இராணுவ தளபதியிடம் கடந்த வார இறுதியில் கையளிக்கப்பட்டது.

35 சாட்சியங்கள்

அந்த வகையில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இராணுவ தரப்பைச் சேர்ந்த 22 பேர், பொலிஸ் தரப்பிலிருந்து 7பேர் மற்றும் 6 சிவிலியன்களிடமிருந்தும் இந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாட்சியங்கள் கடந்த 22 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைக்காக இராணுவத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கா நியமிக்கப்பட்டிருந்ததுடன் அவர் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த சாட்சியங்களை நெறிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள்

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களின் பிரகாரம் அவருக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

அதற்கான நடவடிக்கைகளில் இராணுவ சட்டப் பிரிவைச் சேர்ந்த சட்ட ஆலோசகர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி குற்றப்பத்திரிகை இன்னும் ஓரிரு நாட்களில் தயாராகிவிடும். அதன் பின்னர் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பான அறிவிப்பு வழங்கப்படும்.

இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் குழு

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றசாட்டுக்களை விசாரிப்பதற்காக இராணுவ நீதிமன்றமொன்று நிறுவப்படும். அதில் சுமார் ஐந்து பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவொன்று காணப்படும். இவர்களில் இராணுவ மற்றும் விமானப் படை யைச் சேர்ந்த உயரதிகாரிகள் அடங்குவர். அல்லது இராணுவ தரப்பைச் சேர்ந்த உயரதிகாரிகள் மாத்திரம் உள்ளடங்குவர்.

இருப்பினும் அக்குழுவினை நியமிக்கும் அதிகாரம் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கே உண்டு. அதனால் குறித்த நீதிபதிகள் குழுவினை ஜனாதிபதியே நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இல்லாவிடின் அவரின் ஆலோசனையின் பிரகாரம் அக்குழுவினை இராணுவ தளபதி நியமிப்பார். அந்தவகையில் நீதிபதிகள் குழுவில் யார் அங்கம் வகிப்பார்கள் என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

ஊடகவியலாளர் அனுமதி

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையானது சிவில் நீதிமன்றத்தில் நடைபெறுவதைப் போன்றான பகிரங்கமான வழக்கு விசாரணையல்ல.

அதனால் அவருக்கு எதிரான விசாரணைகளை நேரடியாகப் பார்வையிட்டு செய்திகளை அறிக்கையிடும் வாய்ப்பு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இருப்பினும் ஊடகவியலாளர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்தால் அதற்கானதொரு சந்தர்ப்பத்தினை வழங்க வாய்ப்புண்டு.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தான் எம்.பி.க்கள் அமெரிக்காவில் முழு உடற்பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து நாடு திரும்பினார்கள்


பாகிஸ்தான் எம்.பி.க்கள் குழு ஒன்று 15 நாள் பயணமாக கடந்த மாதம் 28-ந்தேதி அமெரிக்கா சென்றது. அவர்கள் டல்லஸ் விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களுக்கு முழுஉடற் பரிசோதனை நடத்தப்பட இருந்தது. இதை அறிந்ததும் எம்.பி.க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க நாட்டு சட்டப்படி, பாகிஸ்தான் உள்பட 14 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு கூடுதல் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அதோடு முழு உடல் பரிசோதனையும் நடத்தப்பட வேண்டும்.

முழு உடல் பரிசோதனைக்கு பாகிஸ்தான் எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்தனர். இது ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிப்பதாக உள்ளது என்று எடுத்து கூறினார்கள். இதற்கு விமானநிலைய அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த எம்.பி.க்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

70 வயது பாட்டியை உயிருடன் புதைத்த பேராசைக்காரர்கள்


சீனாவில் பொருளாதார முன்னேற்றம் காரணமாக காலி இடங்களில் எல்லாம் அடுக்குமாடி கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. பழைய வீடுகளை எல்லாம் இடித்து விட்டு அங்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி, விற்று காசு பார்ப்பதில் ரியல் எஸ்டேட்காரர்கள் தீவிரமாகி இருக்கிறார்கள். இப்படி அடுக்குமாடி கட்டி காசு பார்த்த இவர்கள் அடுத்தவர்களின் சொத்துக்களையும் அபகரித்து அடுக்குமாடி கட்ட தயங்குவதில்லை. சீனாவில் ஹூபே மாநிலத்தில் வசிப்பவர் 70 வயது பாட்டி வாங்க் கிïயன். இவர் வசித்த பழைய வீட்டையும் புல்டோசர் வைத்து இடித்து விட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஒருவர் முனைந்தார்.

அவர் தொழிலாளர்களை வைத்து வீட்டை இடிக்க முற்பட்டபோது அதை பாட்டி தடுத்தார். அவரை ஒரு தொழிலாளி தடியால் அடித்து உதைத்து அருகில் பள்ளத்தில் தள்ளினார். பிறகு அந்த பள்ளத்தில் மண்ணை அள்ளிப்போட்டு அவரை உயிருடன் புதைத்தார்.

தகவல் அறிந்து அவரது உறவினர்கள் வந்து மண்ணை தோண்டி அவரை மீட்டபோது அவர் இறந்து போய் இருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் சிங்கள ராணுவம் வெற்றிச்சின்னம் அமைத்து வருகிறது.




வெற்றிச்சின்னம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வந்த போர், கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அப்போது நடந்த சண்டையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரன் உடல், முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் ஏரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறியது.

இந்நிலையில், விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக்கடல் ஏரி அருகே இலங்கை ராணுவம் வெற்றிச்சின்னம் அமைத்து வருகிறது. இத்தகவலை கொழும்பில் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கிலப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தை குறிக்கும் வகையிலும், இந்த வெற்றிச்சின்னம் அமைக்கப்பட்டு வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பில் ஒரு வெற்றிச்சின்னம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. அதில், போரில் பங்கேற்ற ராணுவப் படைப்பிரிவுகளின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அனாதையாக 35 ஆயிரம் வாகனங்கள்

இதற்கிடையே, போர் முடிவடைந்து ஓராண்டு ஆகியும், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற பகுதிகள், இன்னும் அலங்கோலமாக காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வெள்ளிமுள்ளிவாய்க்கால், நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களும், 25 ஆயிரம் சைக்கிள்களும் அனாதையாக கிடக்கின்றன. இவை விடுதலைப்புலிகளுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும் சொந்தமானவை ஆகும்.

மேலும், தமிழர்கள் வசித்து வந்த குடிசை வீடுகளும், கான்கிரீட் வீடுகளும் இடிந்து கிடக்கின்றன. ராணுவம் பயன்படுத்திய குண்டு துளைக்காத லாரிகள், ஜீப்கள் ஆகியவையும் போரின்போது தாக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

வெறிச்சோடிய பகுதிகள்

போரில் தகர்க்கப்பட்ட டெலிவிஷன் கோபுரத்தை ராணுவத்தினர் மறுபடியும் எழுப்பி உள்ளனர். இறுதிக்கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, புதுமத்தளம் ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதனால் அப்பகுதிகள், தமிழர்கள் யாரும் குடியேற்றம் செய்யப்படாமல் வெறிச்சோடி போய்க்கிடக்கின்றன.

அதே சமயத்தில், முல்லைத்தீவு கடல் பகுதியில் வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களை குடியேற்றுவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக இலங்கை மந்திரி மில்ராய் பெர்னாண்டோ அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) சார்பில் வன்னியில் போட்டியிடும்


புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்!
புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) ஆகியன எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இணைந்து போட்டியிடுகின்றன. வவுனியாவில் புளொட் அமைப்பின் நங்கூரம் சின்னத்தில் இக்கட்சிகள் இரண்டும் போட்டியிடுகின்றன. தலைமை வேட்பாளராக புளொட் தலைவர் திரு.தருமலிங்கம் சித்தார்த்தனும் மற்றும் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), வண. பிதா பிரான்ஸிஸ் ரஞ்சித் ரூஸ்வெல்ட் அவர்கள், பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்), கந்தையா ஞானதாஸ் (சிவம்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் பாலச்சந்திரன், திருமதி சுப்பிரமணியம் வரோனிகா (இந்திரா), வயிரமுத்து திருவருட்செல்வம், துரைச்சாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு) ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வருமாறு,
இலக்கம் - 1 கந்தையா ஞானதாஸ் (சிவம்)
இலக்கம் - 2 கந்தையா சிவநேசன் (பவன்)
இலக்கம் - 3 துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு)
இலக்கம் - 4 தருமலிங்கம் சித்தார்த்தன் (புளொட் தலைவர், முன்னாள் பா.உ (வன்னி)
இலக்கம் - 5 பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்)
இலக்கம் - 6 பிரான்ஸிஸ் றஞ்சித் ரூஸ்வோல்ட் (ஆசிரியர்)
இலக்கம் - 7 வயிரமுத்து திருவருட்செல்வன் (மூர்த்தி)
இலக்கம் - 8 வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (முன்னாள் பா.உ (வன்னி)
இலக்கம் - 9 சுப்பிரமணியம் வரோனிக்கா (இந்திரா)
மேலும் இங்கே தொடர்க...

சுவிஸில் இலங்கை டயஸ்போராவின் சார்பில் தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வு-


சுவிஸ்லாந்திலுள்ள இலங்கை டயஸ்போராவின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வொன்று சுவிஸ்லாந்தின் பிரிபெர்க் மாநிலத்தில் நடைபெற்றது. சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் சிங்கள பொதுமக்கள் பகிரங்கமாக ஒன்றுகூடி நடாத்திய கலைநிகழ்ச்சி இதுவாகும். மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டிருந்ததுடன், இதில் பிரதம விருந்தினர்களாக ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றும் திரு.ரி.பி.மடுவகெதர, சுவிஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.சேனகா செனவிரத்ன, பௌத்த மதகுருவான மதிப்புக்குரிய திரு.கோட்டேபாய், மற்றும் இந்து மதகுருவான சூரிச் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய குருவான திரு.சர்மா எனும் திரு.சரகணபவானந்த குருக்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அத்துடன் தமிழ் அமைப்புக்களின் சார்பில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டிருந்தனர். குத்துவிளக்கேற்றல் மற்றும் தேசியகீதத்துடன் ஆரம்பமான மேற்படி கலை நிகழ்வின் போது கண்டிய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல தமிழ், சிங்கள கலை நிகழ்ச்சிகளும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ் சிங்கள பாடல்களையும் பாடியமையும் இடம்பெற்றன. சுவிஸ் வரலாற்றில் முதன் முறையாக தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து மேற்படி கலை நிகழ்ச்சியினை நடத்தியமையும், பெருமளவு தமிழ், சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயாகும். மேற்படி கலை நிகழ்வுக்கு பிரபல வர்த்தகர்கள் பலரும் அனுசரணை வழங்கியிருந்தனர். கடந்த மே18 புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தற்போது வர்த்தகர்கள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை அனைவருமே எந்தவித பயபீதியுமின்றி, அச்சுறுத்திலின்றி மனமுவந்து இவ்வாறான நிகழ்வொன்றில் நிம்மதியாக பங்கு கொண்டிருந்தமையும் சுட்டிக் காட்டத்தக்க விடயமாகும். (தகவல் மற்றும் புகைப்பட உதவி






மேலும் இங்கே தொடர்க...