6 ஜனவரி, 2010

உறவினருடன் தங்கியிருந்தோர் கிளிவெட்டி முகாமுக்கு அனுப்பி வைப்பு

மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற்றமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த குடும்பங்களில் ஒரு பகுதியினர் நேற்று கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
6 பஸ்களில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் வாகரை ஊடாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட புனர்வாழ்வு திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷெரீப் தெரிவித்தார்.
சுய விருப்பத்தின் பேரிலேயே இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர் மேலும் 48 குடும்பங்கள் தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 791 குடும்பங்களைச் சேர்ந்த 5159 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளை மீளக்குடியமர்த்த விடாது பொன்சேகாவே தடுத்து வைத்திருந்தார்-ரிஷாத் பதியுதீன்

அகதிகளை மீள்குடியமர்த்தவிடாது அவர்களை முகாம்களில் தடுத்துவைத்திருந்தவர் அப்போதைய படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாதான் என்று மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது ஐ.தே.கட்சி யின் எம்.பி. ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை, நாம் இப்போது அகதிகளை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். இந்த அகதிகளை மீள்குடியமர்த்த விடாது அப்போதைய படைத்தளபதியாகவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாதான் அகதிகளைத் தடுத்து வைத்திருந்தார். அம்மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்குமாறு பொன்சேகா படையினருக்கு உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்ட அகதிகளை மீள்குடியமர்த்து வதற்காகத் நான் அவர்களை வீடுகளுக்கு அனுப்பியபோது அவர்களை பொன்சேகா மீண்டும் அகதிமுகாம்களுக்குத் திருப்பி அனுப்பினார்.
அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு இரண்டு லட்சம் அகதிகளை அரசால் மீள்குடியமர்த்த முடிந்துள்ளது. எஞ்சியுள்ள அகதிகளுள் அதிகமானவர்களை நாம் இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் மீள்குடியமர்த்தி முடிப்போம் என்றார். அப்படியாயின், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ன செய்துகொண்டிருந்தார் என்றும், ஏன் பொன்சேகாவுக்கு ஜெனரல் பதவி கொடுக்கப்பட்டது என்றும் ரவி கருணாநாயக்க அமைச்சரிடம் திருப்பிக் கேள்வி எழுப்பினார்.
மேலும் இங்கே தொடர்க...

குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசு அவசரகால சட்டத்தை நீடிக்காது-பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க

குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசர கால சட்டத்தை நீடிக்கமாட்டாது. அவ்வாறான தேவைகள் அரசுக்கு இல்லை என்று பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரத்னசிறி விக்ரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாதம் வலுப்பெற வேண்டுமென விரும்புகின்றவர்கள் மட்டுமே அவசர கால சட்டத்தை எதிர்ப்பார்கள். உள்நாட்டு வெளிநாட்டு சதிகளின் சதிவேலைக்கு பதிலளிக்க அவசர கால சட்டம் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை கூடியபோது, அவசரகால சட்ட நீடிப்புக்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரதமர் தனது உரையில் மேலும் கூறியதாவது.
2005 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி அமர்வின் போதும் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஒருவர் பயணம் ஒன்றை ஆரம்பிப்பதை விட அதனை முடிப்பது தான் மிக முக்கியமானது. முடிவில் தான் பெறுபேறு தங்கியுள்ளது. எமது அரசாங்கம் அன்று அடிப்படை நோக்கம் ஒன்றை வைத்துத் தான் எமது பணிகளை ஆரம்பித்தது. அது தான் பயங்கரவாதத்திற்கு முற்றிப்புள்ளி வைத்து மக்களுக்கு மீண்டும் சமாதானத்தை பெற்றுக் கொடுப்பதாகும். இன்று அது நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் தற்பொழுது நிம் மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.
வடக்கு கிழக்கில் மாத்திரம் அல்ல தென்பகுதி மக்களும் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். ஏ-9 வீதி ஊடாக தடைகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வீதி ஊடாக தற்பொழுது சென்று வருகின்றனர். மீனவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அந்த மக்களின் வாழ்வாதாரம் சிறந்த முறையில் காணப்படுகின்றது.
பெரும் எண்ணிக்கையிலான மக் கள் தற்பொழுது மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர். புனர்வாழ்வும் புத்துணர்ச்சியும் நிறைந்த வருடமாக இந்த வருடம் உருவாகியுள்ளது. எமது நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை நாம் இன்னும் முழுமையாக அடையவில்லை.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அழுத்தங்கள் காணப்படுகின்றது. அவசர கால சட்டம் நீடிப்பானது நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற வெற்றிக்கு காரணமாகவும் அமைந்திருந்தது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தப்போவதுமில்லை. அதற்காக நீடிக்கவும் மாட்டோம். அவ்வாறான தேவைகள் எமக்கு இல்லை.
பாதுகாப்புப் படையினர் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் மீட்டெடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஆயுதம் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் படையினர் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 3 சதாப்தங்களுக்கு பின்னர் மக்களுக்கு விடிவு கிடைத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அதிபர் - ஆசிரியர் சம்பளம் இவ்வாண்டு உயரும் - கல்வி அமைச்சர்

2006 ஆம் ஆண்டின் அரச நிர்வாக சுற்றறிக்கைக்கு ஏற்ப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு இவ்வருடம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி செலுத்த உள்ள தொகையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி 1005 ரூபா முதல் 1685 ரூபா வரையிலான தொகை சம்பள அதிகரிப்பாக வழங்கப்படவுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி முதலான நிலுவைத் தொகையும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

5 ஜனவரி, 2010

வெள்ளமுள்ளிவாய்க்காலில் பெருந்தொகை ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் ரொக்கட் லோஞ்சர் பொருத்தப்பட்ட எம்.16 ரக துப்பாக்கி, அவர் அணிந்திருந்ததாகக் கருதப்படும் கவச அங்கி, 250 குதிரை வலுகொண்ட படகுகளுக்குப் பொருத்தப்படும் 2 வெளியிணைப்பு என்ஜின்கள், 2000 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து, தற்கொலை தாக்குதலுக்கான அங்கிகள் 88 உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் என்பன வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா பொலிசார் நடத்திய தேடுதலின்போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வடபிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
படையினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணைகள், மற்றும் அவர்களால் வழங்கப்பட்ட தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.
அதியுயர் நிலையில் உள்ளவர்கள் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த துப்பாக்கியையே பிரபாகரன் பயன்படுத்தி வந்தமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான 250 குதிரை வலு கொண்ட படகுகளுக்கான வெளியிணைப்பு இயந்திரங்களை அதிவேகக் கடல் போக்குவரத்திற்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியமையும் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தெரியவந்துள்ளது.
இவற்றுடன் பெருந்தொகையான மிதிவெடிகள் கண்ணி வெடிகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அவசரக் காலச்சட்டம் மேலும் ஒரு மாதம்வரை நீடிப்பு

அவசரக் காலச்சட்டம் 97 வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து 18 வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களிக்கவில்லை. இதனையடுத்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரக் காலச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழருக்கு அரசியல் தீர்வு கிடைத்தால்தான் சந்திரசேகரனின் ஆன்மா சாந்தியடையும் - திருமாவளவன்

அமைச்சர் சந்திரசேகரனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்தாக வேண்டும்" என தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
மறைந்த அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் நேற்று தலவாக்கலையில் நடைபெற்றன. நேற்றைய அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"இன்று அவரது அஞ்சலிக் கூட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் சந்திரசேகரனின் நோக்கம் பற்றிப் பேசுவது பொருத்தமானதாகும்.
மக்கள் மனதில் எப்போதும் நீங்காத இடம்பிடித்துக் கொண்ட அமைச்சர் சந்திரசேகரன் மலையக எம் உறவுகள் மீதும் பூர்வீக தமிழர்கள் மீதும் இணையில்லாத பற்றுக் கொண்டிருந்தார். எமது மக்களுக்கு விடிவு வேண்டும் என எப்போதுமே கூறிவந்தார்.
நாம் இலங்கை வந்திருந்தபோது அமைச்சர் சந்திரசேகரனையும் சந்தித்தோம். அப்போது இலங்கைத் தமிழ் மக்களது நலன் பற்றி அக்கறையுடன் பேசினார்.
இலங்கை மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்த அமைச்சர் சந்திரசேகரனின் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்.
மலையக மக்களின் அபிவிருத்திக்காகவும் பூர்வீக தமிழர்களின் விடிவுக்காகவும் இந்திய அரசாங்கம் உதவ வேண்டிய தேவை உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பயண கட்டுப்பாட்டை நீக்கியது பிரித்தானியா

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை பாரியளவில் தனது பிரஜைகளுக்கு தளர்த்தியிருக்கும் பிரிட்டன், கிழக்கின் சகல பகுதிகளுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் தற்போது செல்ல முடியுமென தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெயிஸ் தெரிவித்திருப்பதாவது; இலங்கைக்கு வருகை தரும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை நான் தளர்த்தியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறேன். கிழக்குப் பகுதிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சமீபத்தில் நான் மேற்கொண்ட விஜயத்தின் அடிப்படையில் நான் மேற்கொண்ட கணிப்பீட்டின் பிரகாரம் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைவரத்தில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதேசமயம் அண்மையில் மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு சூழ்நிலையில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் அப்பகுதிகளுக்கு பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகளை செல்ல வேண்டாமென அறிவுறுத்துகிறோம். கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு பயணம் செய்ய வேண்டாமென தொடர்ந்தும் கூறுகிறோம்.
யாழ்ப்பாணத்திற்கு செல்ல விரும்புபவர்கள் அனுமதி வழங்கப்பட்ட மார்க்கத்திலேயே செல்ல வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஏ9 வீதி அல்லது விமானத்தின் மூலம் பயணம் செய்ய முடியும். பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட வெளிநாட்டுப் பிரஜைகள் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு வங்கிகளில் இலங்கையர் இப்போது கணக்குத் திறக்க முடியும் மத்திய வங்கி அறிவிப்பு

வெளிநாட்டு வங்கிகளில் இலங்கையர்கள் கணக்கைத் திறக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளைத் திறந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அல்லது வெளிநாட்டுக் கம்பனிகளில் குறுகியகால கடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அதேசமயம், உள்நாட்டுக் கம்பனிகளில் ரூபா நாணய அடிப்படையில் வெளிநாட்டவர்கள் முதலிட முடியும் என்றும் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக அல்லது வர்த்தக அலுவல்களுக்காக வருகைதரும் வெளிநாட்டவர்கள் இலங்கை ரூபா நாணயத்தில் கணக்குகளைத் திறக்க முடியும்.
ஒழுங்கு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட சில தளர்வுகளின் ஓரங்கமாகப் பட்டியலிடப்பட்ட கம்பனிகள் இப்போது வெளிநாட்டுப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட சில வெளிநாட்டுக் கம்பனிகள் இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இறக்குமதிக்கான முற்பணக்கொடுப்பனவு மட்டம் அதிகரிக்கப்படும் என்றும் இறக்குமதிக் கொடுப்பனவுக்கான முற்கொடுப்பனவுக் கட்டுப்பாடு அகற்றப்படும் எனவும் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, முற்பணக் கொடுப்பனவுகளின் கீழுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதிகளுக்குத் தேவைப்படும் அதி உச்ச வரையறை அகற்றப்படுவதாகவும் நடைமுறை மற்றும் மூலதனப் பரிவர்த்தனைக்காக வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்களில் அதிகளவு தளர்வுப் போக்கை கடைப்பிடிப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆறாத சோகத்துடன் மலையகம் சந்திரசேகரனுக்கு இறுதிவிடை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி

ஆறாத சோகத்துடன் மலையகம் சந்திரசேகரனுக்கு இறுதிவிடை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி மலையகத் தமிழர்களின் உரிமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் மூன்று தசாப்த காலமாக போராடிய மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கதறியழ அக்கினியுடன் சங்கமமாகியது. அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக்கிரியைகள் தலவாக்கலையிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற பின்னர் தலவாக்கலை பொது மைதானத்தில் அரச மரியாதையுடன் தகனக்கிரியை இடம்பெற்றது.
அமைச்சர் சந்திரசேகரன் சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை காலமானார். அன்னாரின் பூதவுடலுக்கு கடந்த இரு தினங்களாக அரசியல், தொழிற்சங்க பிரமுகர்கள், சர்வமத தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சரின் பூதவுடல் நேற்று முன்தினம் தலவாக்கலை லிந்துலை நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை தலவாக்கலை ஹேமசந்திர மாவத்தையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று 1.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேழை இல்லத்திலிருந்து தலவாக்கலை பொது மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் நகரசபை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர்.
அரசு சார்பில் அமைச்சர் டி.எம்.ஜயரட்னவும் எதிர்க் கட்சித் தலைவர் சார்பில் ரவீந்திர சமரவீர எம்.பி.யும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனும் மலையக மக்கள் முன்னணி சார்பில் பிரதியமைச்சர் பீ.இராதாகிருஷ்ணனும் பொதுச் செயலாளர் விஜயகுமாரும் இரங்கலுரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து தகனக் கிரியை இடம்பெற்றது. மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சர் தி.மு.ஜயரட்ண, இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான திகாம்பரம், உதயகுமார், கணபதி கனகராஜ், சதாசிவம் உட்பட 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தலவாக்கலை, அட்டன், பொகவந்தலாவை, நுவரெலியா போன்ற பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர். பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் அன்னாரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்தும் சோக கீதங்கள் இசைக்கப்பட்டவண்ணமாக மலையகம் காணப்பட்டது. அத்துடன் மலையகப் பகுதிகளில் நேற்று விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...