5 ஜனவரி, 2010

வெள்ளமுள்ளிவாய்க்காலில் பெருந்தொகை ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் ரொக்கட் லோஞ்சர் பொருத்தப்பட்ட எம்.16 ரக துப்பாக்கி, அவர் அணிந்திருந்ததாகக் கருதப்படும் கவச அங்கி, 250 குதிரை வலுகொண்ட படகுகளுக்குப் பொருத்தப்படும் 2 வெளியிணைப்பு என்ஜின்கள், 2000 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து, தற்கொலை தாக்குதலுக்கான அங்கிகள் 88 உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் என்பன வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா பொலிசார் நடத்திய தேடுதலின்போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வடபிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
படையினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணைகள், மற்றும் அவர்களால் வழங்கப்பட்ட தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.
அதியுயர் நிலையில் உள்ளவர்கள் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த துப்பாக்கியையே பிரபாகரன் பயன்படுத்தி வந்தமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான 250 குதிரை வலு கொண்ட படகுகளுக்கான வெளியிணைப்பு இயந்திரங்களை அதிவேகக் கடல் போக்குவரத்திற்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியமையும் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தெரியவந்துள்ளது.
இவற்றுடன் பெருந்தொகையான மிதிவெடிகள் கண்ணி வெடிகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.