6 ஜனவரி, 2010

அகதிகளை மீளக்குடியமர்த்த விடாது பொன்சேகாவே தடுத்து வைத்திருந்தார்-ரிஷாத் பதியுதீன்

அகதிகளை மீள்குடியமர்த்தவிடாது அவர்களை முகாம்களில் தடுத்துவைத்திருந்தவர் அப்போதைய படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாதான் என்று மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது ஐ.தே.கட்சி யின் எம்.பி. ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை, நாம் இப்போது அகதிகளை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். இந்த அகதிகளை மீள்குடியமர்த்த விடாது அப்போதைய படைத்தளபதியாகவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாதான் அகதிகளைத் தடுத்து வைத்திருந்தார். அம்மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்குமாறு பொன்சேகா படையினருக்கு உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்ட அகதிகளை மீள்குடியமர்த்து வதற்காகத் நான் அவர்களை வீடுகளுக்கு அனுப்பியபோது அவர்களை பொன்சேகா மீண்டும் அகதிமுகாம்களுக்குத் திருப்பி அனுப்பினார்.
அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு இரண்டு லட்சம் அகதிகளை அரசால் மீள்குடியமர்த்த முடிந்துள்ளது. எஞ்சியுள்ள அகதிகளுள் அதிகமானவர்களை நாம் இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் மீள்குடியமர்த்தி முடிப்போம் என்றார். அப்படியாயின், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ன செய்துகொண்டிருந்தார் என்றும், ஏன் பொன்சேகாவுக்கு ஜெனரல் பதவி கொடுக்கப்பட்டது என்றும் ரவி கருணாநாயக்க அமைச்சரிடம் திருப்பிக் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக