5 ஜனவரி, 2010

வெளிநாட்டு வங்கிகளில் இலங்கையர் இப்போது கணக்குத் திறக்க முடியும் மத்திய வங்கி அறிவிப்பு

வெளிநாட்டு வங்கிகளில் இலங்கையர்கள் கணக்கைத் திறக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளைத் திறந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அல்லது வெளிநாட்டுக் கம்பனிகளில் குறுகியகால கடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அதேசமயம், உள்நாட்டுக் கம்பனிகளில் ரூபா நாணய அடிப்படையில் வெளிநாட்டவர்கள் முதலிட முடியும் என்றும் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக அல்லது வர்த்தக அலுவல்களுக்காக வருகைதரும் வெளிநாட்டவர்கள் இலங்கை ரூபா நாணயத்தில் கணக்குகளைத் திறக்க முடியும்.
ஒழுங்கு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட சில தளர்வுகளின் ஓரங்கமாகப் பட்டியலிடப்பட்ட கம்பனிகள் இப்போது வெளிநாட்டுப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட சில வெளிநாட்டுக் கம்பனிகள் இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இறக்குமதிக்கான முற்பணக்கொடுப்பனவு மட்டம் அதிகரிக்கப்படும் என்றும் இறக்குமதிக் கொடுப்பனவுக்கான முற்கொடுப்பனவுக் கட்டுப்பாடு அகற்றப்படும் எனவும் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, முற்பணக் கொடுப்பனவுகளின் கீழுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதிகளுக்குத் தேவைப்படும் அதி உச்ச வரையறை அகற்றப்படுவதாகவும் நடைமுறை மற்றும் மூலதனப் பரிவர்த்தனைக்காக வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்களில் அதிகளவு தளர்வுப் போக்கை கடைப்பிடிப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக