5 ஜனவரி, 2010

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பயண கட்டுப்பாட்டை நீக்கியது பிரித்தானியா

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை பாரியளவில் தனது பிரஜைகளுக்கு தளர்த்தியிருக்கும் பிரிட்டன், கிழக்கின் சகல பகுதிகளுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் தற்போது செல்ல முடியுமென தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெயிஸ் தெரிவித்திருப்பதாவது; இலங்கைக்கு வருகை தரும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை நான் தளர்த்தியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறேன். கிழக்குப் பகுதிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சமீபத்தில் நான் மேற்கொண்ட விஜயத்தின் அடிப்படையில் நான் மேற்கொண்ட கணிப்பீட்டின் பிரகாரம் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைவரத்தில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதேசமயம் அண்மையில் மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு சூழ்நிலையில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் அப்பகுதிகளுக்கு பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகளை செல்ல வேண்டாமென அறிவுறுத்துகிறோம். கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு பயணம் செய்ய வேண்டாமென தொடர்ந்தும் கூறுகிறோம்.
யாழ்ப்பாணத்திற்கு செல்ல விரும்புபவர்கள் அனுமதி வழங்கப்பட்ட மார்க்கத்திலேயே செல்ல வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஏ9 வீதி அல்லது விமானத்தின் மூலம் பயணம் செய்ய முடியும். பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட வெளிநாட்டுப் பிரஜைகள் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக