5 ஜனவரி, 2010

ஆறாத சோகத்துடன் மலையகம் சந்திரசேகரனுக்கு இறுதிவிடை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி

ஆறாத சோகத்துடன் மலையகம் சந்திரசேகரனுக்கு இறுதிவிடை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி மலையகத் தமிழர்களின் உரிமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் மூன்று தசாப்த காலமாக போராடிய மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கதறியழ அக்கினியுடன் சங்கமமாகியது. அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக்கிரியைகள் தலவாக்கலையிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற பின்னர் தலவாக்கலை பொது மைதானத்தில் அரச மரியாதையுடன் தகனக்கிரியை இடம்பெற்றது.
அமைச்சர் சந்திரசேகரன் சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை காலமானார். அன்னாரின் பூதவுடலுக்கு கடந்த இரு தினங்களாக அரசியல், தொழிற்சங்க பிரமுகர்கள், சர்வமத தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சரின் பூதவுடல் நேற்று முன்தினம் தலவாக்கலை லிந்துலை நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை தலவாக்கலை ஹேமசந்திர மாவத்தையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று 1.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேழை இல்லத்திலிருந்து தலவாக்கலை பொது மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் நகரசபை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர்.
அரசு சார்பில் அமைச்சர் டி.எம்.ஜயரட்னவும் எதிர்க் கட்சித் தலைவர் சார்பில் ரவீந்திர சமரவீர எம்.பி.யும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனும் மலையக மக்கள் முன்னணி சார்பில் பிரதியமைச்சர் பீ.இராதாகிருஷ்ணனும் பொதுச் செயலாளர் விஜயகுமாரும் இரங்கலுரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து தகனக் கிரியை இடம்பெற்றது. மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சர் தி.மு.ஜயரட்ண, இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான திகாம்பரம், உதயகுமார், கணபதி கனகராஜ், சதாசிவம் உட்பட 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தலவாக்கலை, அட்டன், பொகவந்தலாவை, நுவரெலியா போன்ற பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர். பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் அன்னாரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்தும் சோக கீதங்கள் இசைக்கப்பட்டவண்ணமாக மலையகம் காணப்பட்டது. அத்துடன் மலையகப் பகுதிகளில் நேற்று விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக