29 ஜூன், 2011

பாலியலுக்கான மனிதக் கடத்தலில் ஒரு மூலமாக இலங்கை உள்ளது: அமெரிக்காவின் ஆண்டறிக்கை

மனிதக் கடத்தல்களை தடுப்பதற்கான குறைந்தபட்ச தராதரங்களுக்குரிய கடப்பாடுகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் ஆனால் இதில் குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மனிதக் கடத்தல்கள் தொடர்பான அமெரிக்காவின் 2011 ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் கட்டாய வேலை வாங்கல் மற்றும் பாலியலுக்காக கடத்தப்படுவதில் இலங்கை ஒரு மூலமாக இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் இலங்கையை கண்காணிப்புப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள அமெரிக்கா, இரண்டாம் மட்டத்தில் குறித்துள்ளது. அதன் பொருள், கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் அதை செய்வதற்கு குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதாகும்.

மனிதக் கடத்தல்களை குறிப்பாக பெண்கள், சிறார்களை கடத்துவதை தடுக்கும், ஒடுக்கும் தண்டிப்பதற்கான ஐ.நா.வின் 2000 ஆம் ஆண்டு ஷரத்தை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அறிக்கையில் இலங்கை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஆண்கள், பெண்கள் சிறார்கள் (16 17 வயதானோர்) குவைத், ஜோர்டான், சவூதி அரேபியா, கட்டார், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், பஹ்ரெய்ன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நிர்மாணத் தொழிலாளர்களாக, வீட்டுப் பணியாளர்களாக அல்லது தொழிற்சாலை ஊழியர்களாக செல்கின்றனர்.

அத்தொழிலாளர்களில் சிலர், நடமாட்டக் கட்டுப்பாடு, கடவுச் சீட்டை தடுத்து வைத்தல், அச்சுறுத்தல் உடல் ரீதியான அல்லது பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் மூலம் கட்டாய வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அண்மையில் வெளியான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் ஜோர்தானில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோர் அவர்களின் எஜமானர்களால் உடல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் 11 சதவீதமானோர் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகுவதாகவும் 60 வீதமானோர் சம்பளம் வழங்கப்படாதிருப்பதாகவும் 60 சதவீதமானோர் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இருப்பதாகவும் 80 சதவீதமானோர் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் சவூதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளில் இலங்கை பணியாளர்கள் உடலில் 20 ஆணிகள் ஏற்றப்பட்டமை அல்லது 9 ஆணிகளை உட்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டமை உட்பட உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவதாக செய்திகள் வெளியாகின. இலங்கை வேலைவாய்ப்பு முகவர்கள் ஒப்பந்தங்களை மாற்றுதல் ஒரு வேலைக்கு வாக்குறுதி வழங்கி விட்டு (தொழில் புரியும் இடங்களை) அடைந்த பின் வேலை, தொழில் தருநர், வேலை சூழல், சம்பளம் ஆகியவற்றை மாற்றுதல் உட்பட மோசடிகளில் ஈடுபடுவதாகவும் அறிக்கைகள் வெளியாகின. இது கட்டாய வேலை வாங்குதல் மற்றும் கடன் பிணைகளுக்கான அச்சுறுத்தல் காரணிகளாகின்றன.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐ. அ. எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைத்தங்கல் நாடாக இலங்கை உள்ளது. அவர்களில் சிலர் கடத்தலால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் வேலை வாய்ப்பு முகவர்களால் ஆண்கள் இலங்கையில் நிர்க்கதியாக்கப்பட்டனர்.

இலங்கைப் பெண்கள் பலர் ஏனைய நாடுகளில் வீட்டுப் பணிப் பெண் போன்ற வேலைகளுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு ஆனால் அங்கு வந்து சேர்ந்த பின் விபசார நிலையங்கள் போன்றவற்றில் (அதிகமாக சிங்கப்பூரில்) பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சொற்ப எண்ணிக்கையான பெண்கள் மாலைதீவில் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த நாட்டிற்குள் பெண்களும் சிறார்களும் விபசார விடுதிகளுக்கான பாலியல் கடத்தல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வடக்கிற்குச் செல்லும் இலங்கை படையினரின் முக்கிய இடைத்தங்கல் நிலையமாக விளங்கும் அநுராதபுரம் பகுதியில் சிறுமிகளை விட சிறுவர்கள் விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக கரையோரப் பகுதிகளில் பாலியல் சுற்றுலாவுக்காக இது நடைபெறுகிறது. சுமார் 1,000 சிறார்கள் இலங்கையில் பாலியல் சுரண்டல்களுக்குள்ளாவதாக 2009 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மதிப்பிட்டிருந்தது. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த எண்ணிக்கை 10,000 இற்கும் 15,000 இற்கும் இடைப்பட்டதாகும் எனத் தெரிவித்திருந்தன.

யுத்தத்தின் பின்னர் வறுமையான கிழக்குக் கரையோரத்தில் அண்மையில் ஏற்பட்ட சுற்றுலா அதிகரிப்பானது சிறுவர் பாலியல் சுற்றுலாவுக்கான கேள்வியை அதிகரிக்கக் கூடும்.

உலர் வலயங்களில் பெருந்தோட்ட பண்ணைப் பகுதிகள், பட்டாசு, கருவாட்டு தொழிற்றுறை போன்றவற்றில் சிறார்கள் கொத்தடிமையாக அல்லது கட்டாய வேலை வாங்கலுக்கு உள்ளாவதாக அறிக்கைகள் வெளியாகின. சிறார்கள் சிலர், பொதுவாக தமிழ் தேயிலைத் தோட்டத் துறையை சேர்ந்தோர் கொழும்பில் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் உடல், உள, பாலியல் துஷ்பிரயோகம், சம்பளம் வழங்கப்படாமை, நடமாட்டம் கட்டுப்படுத்தப்படல் போன்றனவற்றுக்கு உள்ளாகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறார்கள் சிலர் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் வழங்கப்படும் என முகவர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டு, விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். தாய்லாந்து, சீனா, தெற்காசியா, ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த சொற்ப எண்ணிக்கையான பெண்கள் இலங்கையில் விபசாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக