29 ஜூன், 2011

கொழும்பில் புதிய வாடகை கார் சேவையினால் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழக்கும்: ஐ.தே.க



அரசாங்கத்தினால் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நனோ டெக்ஸி (வாடகைக் கார்) திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழப்பதுடன் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தொழில்களை இழக்கவேண்டிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் இங்கு மேலும் கூறுகையில், கொழும்பில் மாத்திரம் சுமார் 40 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன. இன்னும் முழு நேர தொழில்களுக்கும் இந்த முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அது மட்டுமல்லாது, உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்வோர் விற்பனையில் ஈடுபடுவோர் என மொத்தத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இத் திட்டத்தினால் தொழில் இழக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் இத் திட்டத்தின் மூலம் தலைநகரில் முச்சக்கர வண்டிகளை இல்லாது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது ஒரு பாரதூரமான விடயமாகும். எனவே நனோ டெக்ஸி திட்டத்தை கைவிடுமாறும் முச்சக்கர வண்டித்தொழிலாளர்களை சங்கடத்தில் தள்ளிவிட வேண்டாம் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதேவேளை, தலைநகரை அழகு மயப்படுத்தப் போவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்ற அரசாங்கம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எண்ணுவதாகத் தெரியவில்லை.

கொழும்பு நகர சபைக்கு சொந்தமான 140 மில்லியன் ரூபாவை செலவிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து அலரி மாளிகை வரையிலான மூன்ற கிலோமீற்றர் பாதையை திருத்தியமைக்கின்ற அரசாங்கம் தலைநகர் குடியிருப்புப பகுதிகளில் கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திர வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்காதிருக்கின்றது. அது மட்டுமல்லாது, வடிகான்களை துப்புரவு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் இல்லை. இவ்வாறு பலதரப்பட்ட குறைபாடுகள் இருக்கின்ற நிலையில் காலி வீதியையும் கருவாத்தோட்ட வீதிகளையும் திருத்தியமைப்பதற்கு அரசு முன் நிற்கின்றது. இதன் மூலம் தலைநகரை அழகுபடுத்தி விட முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக