29 ஜூன், 2011

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளினதும் விபரங்களை வெளியிட்டு அவர்களின் விடுதலையை காலதாமதமின்றி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தும் முகமாக நாளை வியாழக்கிழமை கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கம் அறிவித்துள்ளது.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இலங்கையில் ஏராளம் உண்டு. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் அப்புறப்படுத்தப்பட்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் அரசு தவறிழைத்துள்ளது என்றும் அவ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த கூறுகையில் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் இன்று வரையில் இழுபறி நிலையிலேயே உள்ளன. 10 தொடக்கம் 15 வருட காலமாக எவ்விதமான விசாரணைகளும் இன்றி பெரும் தொகையான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையானது பாரிய மனிதாபிமான மற்ற செயலாகவே அமைகின்றது.

அரசியல் கைதிகளின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர் விபரங்கள் கூட இதுவரையில் வெளியிடப்படவில்லை. சிறைச்சாலைகள் அமைச்சர் 12 ஆயிரம் பேர் சிறையில் உள்ளதாகவும் 3 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவில் வைத்து 4 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார். பாராளுமன்றத்தில் 639 பேர் மாத்திரமே உள்ளதாக கூறுகின்றனர்.

எனவே இதில் எந்த தரவு உண்மையானது இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு அரசின் வெளிப்படையற்ற தன்மையே காரணமாகின்றது. தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கான போராட்டத்தில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக