29 ஜூன், 2011

தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது: ஜா.ஹெ.உ


தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது. வடக்கு கிழக்கிற்கு ஏனைய மாகாண சபைகளுக்குள்ள நிர்வாக முறையையும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுமே வழங்க வேண்டும். மேலதிகமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமேயானால் அதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் அநாவசியமான தீர்வுத் திட்டங்களை தேசிய அரசியலுக்குள் உட்புகுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. இன்று தமிழர்கள் எவ்விதமான பிரச்சினையும் இன்றி இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க கூறுகையில்: இலங்கையில் 30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்து இரண்டு வருட காலமாகின்றது. இன்று வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழர்கள் நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடிய அச்சமற்ற சூழல் பிறந்துள்ளது. எவ்விதமான பிரச்சினைகளும் அசம்பாவிதங்களும் இன்றி மூவின மக்களும் வாழ்கின்றனர். இதுவே யுத்தத்தின் பின்னர் இலங்கை அடைந்த மிகப் பெரிய வெற்றியாகும்.

இதனை சீர்குலைக்கும் வகையில் முடிவுற்ற பிரச்சினைக்கு தீர்வுக் காண அதிகாரப் பகிர்வுகளை விஸ்தரிப்பது படுமோசமான செயலாகும். அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை ஆராய்வதில் எவ்விதமான தவறும் இல்லை ஆனால் புலிகளின் கோரிக்கைகளையே முன் வைக்கும் கூட்டமைப்பு போன்றவர்களிடம் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவது ஆபத்தான விடயமாகும்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப் பகிர்வு ஒன்றுக்கு ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது. நாட்டை மீண்டும் பின்னகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். அரசாங்கம் தமிழ் மக்களின் உண்மையான அடிப்படைப் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன் வைக்க வேண்டும்.பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை கிடையாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக