24 ஜூன், 2011

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள்

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'செனல்-4', தாருஸ்மன் அறிக்கை என எமக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதில் குறிப்பாக எனது பெயருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ என எம் மூவரது பெயர்களே குறிப்பிடப்படுகின்றன. நம் நாட்டுத் தாய்மாரின் கண்ணீரைத் துடைத்த எம்மை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லும் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எல்லாவற்றையும் விட எமக்கு எமது நாடு பெரிது அதன் கீர்த்தியும் பெரிது. நாட்டை மீட்பதில் உதவியது போல் சவால்களை வென்று நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் சகலரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விவசாய மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தப்படுகிறது. மக்களை வாழவைப்பதைவிட மேலான மனித உரிமை எதுவென நான் கேட்க விரும்புகிறேன்.

தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்பது நாட்டின் அரசியல் வேலைத்திட்டமல்ல. அது மக்களைப் பலப்படுத்தும் திட்டமாகும்.

நாட்டை மீட்டெடுத்து மக்களைப் பலப்படுத்தி தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொள்ளும் திட்டங்கள் சிலருக்கு பார்க்கப் பொறுக்கவில்லை.

நாம் பயங்கரவாதிகள் சீரழித்த நாட்டை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் பல்வேறு நோக்கங்களுக்காக அபகரித்த காணிகள் இழக்கப்பட்ட வளங்களையும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியில் எம்மை வீழ்ச்சியுறச் செய்வதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி சகல மதங்களுக்குமான உரிமைகளை வழங்கி முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் எம்மைக் காலை வாரிவிட முயல்கின்றன.

விவசாயிகளின் உரிமையை அவர்களிடமிருந்து அபகரித்ததுடன் ச.தொ.ச. போன்ற நிறுவனங்களை விற்றனர்.

நாம் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்ற முயல்கையில் அதனைத் திரிபுபடுத்தி தருஸ்மன் அறிக்கை, மனித உரிமை மீறல் என குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. தமிழாயிருக்கட்டும், சிங்களமாயிருக்கட்டும் நம் தாய்மாரின் கண்ணீருக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.

‘சனல் 4’ எனக் கூறிக்கொண்டு எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். அத்தகைய சதிமுயற்சிகளுக்கு எமக்கு எதிராகச் செயற்படும் சக்திகள் துணை போகின்றன. இது விடயத்தில் அனைவரும் அவதானமாயிருக்க வேண்டியது அவசியம்.

நாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் நாட்டு மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். அப்பாவி விவசாயிகளின் உரிமைகளைச் சூறையாட இடமளிக்க முடியாது.

இத்தகைய சதிமுயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பயிர்ச் செய்கையைப் போலவே நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளிலும் விவசாய சமூகம் விழிப்பாகச் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக