ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் 2014-க்குள் முற்றாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார் அதிபர் பராக் ஒபாமா.
வாஷிங்டன், ஜூன் 23: அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அழித்து நம்முடைய லட்சியத்தை நிறைவேற்றிவிட்டதால் ஆப்கானிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையில் அமெரிக்கத் துருப்புகளை இனி ஆண்டுதோறும் விலக்கிக் கொள்வோம் என்று அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 30,000 துருப்புகள் விலக்கிக் கொள்ளப்படுவர் என்றும் எஞ்சியுள்ள 68,000 பேர் கட்டம் கட்டமாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு முதல் கட்டமாக 10,000 அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திரும்புவர். 23,000 பேர் 2012 செப்டம்பரில் நாடு திரும்புவர்.
2012 நவம்பரில்தான் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.
வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய தொலைக்காட்சி, வானொலி உரையில் துருப்பகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்தார் ஒபாமா. 13 நிமிஷங்களுக்கு இந்த உரை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேச்சு சாதாரண வானொலி, தொலைக்காட்சி உரையாக இல்லாமல் அதிபரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட பேச்சு போலவே இருந்தது.
""ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இது ஆரம்பம்தான், முடிவல்ல. ஆப்கானிஸ்தானில் தலையிட்டதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.
நம்முடைய துருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தங்கள் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும்.
2014-ம் ஆண்டில் நம்முடைய துருப்புகள் அனைவரையும் நாம் விலக்கிக் கொண்டுவிடுவோம். நாட்டை பாதுகாக்கும் முழுப்பொறுப்பு ஆப்கன் ஆட்சியாளர்களிடம் தரப்பட்டுவிடும்.
பத்தாண்டுகளுக்கு முன்னால் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு நியூயார்க் நகரமும் வாஷிங்டனும் ஆளாயின. (இரட்டைக் கோபுர கட்டடத்தையும் பென்டகனையும் அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்கியதைக் குறிப்பிடுகிறார்)
ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் நிகழ்த்திய பேர்ல்-ஹார்பர் (முத்துத் துறைமுகம்) தாக்குதலை விடக் கொடிதானது அந்தச் செயல். இந்தப் படுகொலைகளை அல் காய்தா இயக்கமும் அதன் தலைவர் ஒசாமா பின் லேடனும் திட்டமிட்டு நிகழ்த்தினர்.
இந்தத் தாக்குதல் நமக்குப் புதியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதிகளின் இலக்கு போர்க்களத்தில் ஆயுதங்களுடன் நின்று சண்டை போடவல்ல நம்முடைய ராணுவ வீரர்கள் அல்ல; என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்கள். ஆடவர், மகளிர், குழந்தைகள் என்று சூதுவாது அறியாத அப்பாவிகள் எண்ணில் அடங்காமல் இத் தாக்குதலுக்கு உயிரிழக்கத் தொடங்கினர்.
இதன் பிறகே நாம் தேச அளவில் ஒன்றுபட்டோம். இந்த அல்-காய்தா இயக்கத்தையும் அவர்களுக்குத் துணை நிற்கும் தலிபான்களையும் பூண்டோடு அழிக்க சபதம் பூண்டோம். இப்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை அழித்துவிட்டோம்.
இராக்கிலும் நாம் இரண்டாவது போரை நடத்த வேண்டியிருந்தது. அங்கே மக்களுடைய ஆதரவுடன் பதவிக்கு வந்த அரசைக்காக்க நாம் கோடிக்கணக்கான ரூபாய்களை மட்டும் அல்ல நம்முடைய ராணுவத்தின் விலைமதிக்க முடியாத வீரர்களின் உயிர்களையும் பலி கொடுக்க வேண்டியிருந்தது.
அல்காய்தா தலைவர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி பதுங்கினர். தலிபான்கள் அணி சேர்ந்து நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம்முடைய எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானியப் பகுதிகளும் நம்முடைய தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நான் அதிபராக இருக்கும்வரை பயங்கரவாதிகளையும் அவர்களுடைய பதுங்கு தளங்களையும் விட்டுவைக்கவே மாட்டேன். நம்மைக் கொல்ல நினைப்பவர்கள் நம்மிடமிருந்தும் நீதியிடமிருந்தும் தப்பவே முடியாது.
பயங்கரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுவோம். அவர்களை ஒழிப்பது அவசியம் என்பதை பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்துவோம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவோம் என்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள் என்று பாகிஸ்தானிடம் கண்டிப்புடன் கூறுவோம்.
தலிபான்கள் அல் காய்தாவுடனான தங்களுடைய தொடர்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டும்.
அரசுடன் சமாதானப் பேச்சு நடத்தும் முன் ஆயுதங்களை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்; ஆப்கானிஸ்தான் நாட்டு அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்.
நாம் கொண்டுள்ள லட்சியம் எளிதில் அடையக்கூடியதுதான். அது மிகவும் வெளிப்படையானது. அல் காய்தாவோ அவருடைய சார்பு அமைப்புகளோ நம் மீதும் நம்முடைய நட்பு நாடுகள் மீதும் மறந்தும் கைவைக்கக்கூடாது என்பதுதான் நமது முக்கிய நிபந்தனை.
நாம் இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்தான அமெரிக்க குடிமக்கள் மீது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும்.
புதிய வேலைவாய்ப்பையும் தொழில்துறை உற்பத்தியையும் அதிகரிக்கும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம்முடைய அடித்தள கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். தூய்மையான, இயற்கைக்கு கேடில்லாத ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகளை அதிகம் நாடியாக வேண்டும்'' என்றார் ஒபாமா.
நெருக்கடி ஏன்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ள ஒபாமா அமெரிக்க மக்களிடையே சரிந்துவரும் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் நோக்கத்திலேயே இந்த அறிவிப்பைத் திடீரென வெளியிட்டிருக்கிறார்.
அவர் உறுதியளித்தபடி பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் நடைபெறாததால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்க நிலையும் குறையவில்லை, வேலையில்லாத் திண்டாட்டமும் மறையவில்லை. எனவே ஒபாமாவுக்கு மக்களிடையே செல்வாக்கு சரிந்தது.
இந்த நிலையில்தான் ஒசாமா பின் லேடனை அமெரிக்கத் துருப்புகள் திடீர் நடவடிக்கையில் கொன்றனர். அதனால் சரிந்த செல்வாக்கு ஓரளவுக்கு கூடியது என்றாலும் பழையபடி மக்களிடையே அமோக ஆதரவுபெற அது போதுமானதாக இல்லை என்று அதிபர் கருதியிருப்பதைப் போலத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தான் அரசிலும் அந்த ஆட்சியாளர்கள் தலிபான்களுடன் ரகசியமாகப் பேச்சு நடத்துகின்றனர், சுமுகமாகப் போக பேரம் நடக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. அமெரிக்கா தரும் நிதியில் பெரும்பகுதியை ஆட்சியாளர்களே கையாடல் செய்கின்றனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மாதந்தோறும் 10,000 கோடி டாலர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளின் பராமரிப்புக்காகவே செலவாகிறது. இதை அமெரிக்க மக்களால் தாங்க முடியவில்லை. உள்நாட்டில் வரியைக் குறைக்கவோ வசதிகளைப் பெருக்கவோ நிதி இல்லை என்று கூறிவிட்டு ஆப்கானிஸ்தானில் கொண்டுபோய் இத்தனை கோடி டாலர்களைத் தண்டமாக கொட்டி அழ வேண்டுமா என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர். எனவேதான் துருப்புகளைக் குறைப்பது என்ற முடிவுக்கு அமெரிக்க அதிபர் வந்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக