24 ஜூன், 2011

போதைவஸ்துக்கு அடிமையான 4000 கைதிகளுக்கு புனர்வாழ்வு

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 500 கைதிகள் போதைவஸ்துக்கு அடிமையாகி நோயாளிகளாக பெரும் வேதனைக்கு உட்பட்டிருப்பது இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து, சுகதேகிகளாக மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்டி. சில்வா இப்போது நவீன திட்டம் ஒன்றை தயாரித்துள்ளார்.

இவர்கள் அனைவரையும் பல்லேகலயில் புதிதாக ஆரம்பித்துள்ள சிறைக் கைதிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி, இந்த கொடிய போதைப் பொருள் பாவனைப் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் இவ்விதம் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.

இவ்விதம் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ள சிறைக்கைதிகளுக்கு இந்திய தீய பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வைத்திய சிகிச்சைகளை அளிப்பதுடன், அவர்களுக்கு நல் ஆலோசனை செய்யும் வகுப்புகளையும் இவர் ஒழுங்கு செய்துள்ளார்.

சுமார் ஓராண்டு காலம் இவ்விதம் போதைப் பாவனைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு பயிற்சியளித்தால் அவர்களை முற்றாக திருத்தி நல்வழிப்படுத்த முடியும் என்று சிறை அதிகாரிகள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

இவற்றுடன் சிறைச்சாலை திணைக்களம் இந்த கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளையும் வழங்கும். இந்த பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் போதைப் பொருள் பாவனை பழக்கத்திலிருந்து முற்றாக விடுவிக்கப்படும் இந்த கைதிகள் மீண்டும் சமூகத்தில் சங்கமிப்பதற்கு ஏதுவாக விடுவிக்கப்படுவார்கள்.

இந்த பல்லேகல புனர்வாழ்வு நிலையத்தின் இரண்டாவது கட்ட சிகிச்சையின் போது, மேலும் நாலாயிரம் சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக