24 ஜூன், 2011

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - பாகிஸ்தான் இணைந்து செயல்படும்'

இஸ்லாமாபாத், ஜூன் 23: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை தொடங்கியது.

அப்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் தாமதம் குறித்து பாகிஸ்தானிடம் கவலை தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இஸ்லாமாபாத்துக்கு வியாழக்கிழமை வந்தார். தொடர்ந்து அவர் பாகிஸ்தான் வெளியறவுச் செயலர் சல்மான் பஷீரை சந்தித்து முதல் சுற்று பேச்சுகளைத் தொடங்கினார்.

இருநாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சி என மூன்று பிரிவுகளாகப் பேச்சு நடைபெறுகிறது.

முதல் கட்டப் பேச்சுக்குப்பின் செய்தியாளர்களிடம் நிருபமா ராவ் கூறியது:

நாடுகளின் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும். பயங்கரவாதம் என்பது ஒரு பகுதியில் மட்டும் உள்ள பிரச்னையில்லை, சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுடன் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு உள்ளது வெளிப்பட்டுள்ள நிலையில் நடைபெறும் இப்பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக