23 மே, 2011

2400 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம் அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் வைபவம்

தேசியக் கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடகால டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த சுமார் 2400 பேருக்கு நாளை (24ம் திகதி) ஆசிரியர் நியமனம் வழங்கப் படவுள்ளது.

இவர்களுக்கு ஆசிரிய சேவை நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தலைமையில் நடைபெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆசிரியர் நியமனக் கடிதம் கையளிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி தெரிவித்தார்.

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ள தாகவும் உரிய நேரத்திற்கு சமுகமளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும், மேலதிக செயலாளர் முகம்மட்தம்பி மேலும் தெரிவித்தார்.நாடளாவிய ரீதியில், தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மூன்று வருட டிப்ளோமாப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த சுமார் 2400 பேர் நாளைய தினம் நியமனக் கடிதம் பெறவுள்ளனர். இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு – 03 தரம் ஒன்றுக்கு இவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

புதிய டிப்ளோமாதாரிகளில் அதிகமானவர்கள் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நியமனத்தின் மூலம் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் முற்றாக நிவர்த்திக்கப்படும் என மேலதிக செயலாளர் முகம்மட்தம்பி குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தவிர்ந்த எஞ்சியவர்கள், மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களின் அடிப்படையிலும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் வழங்கிய பட்டியலின் பிரகாரமும், மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களையும் கல்வி அமைச்சே வழங்கவுள்ளது.

நாளைய வைபவத்தின் போது, மாகாணப் பாடசாலை ஆசிரியர்களும், ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதம் பெறவுள்ளனர்.

ஆசிரியர்களில் அதிகமானவர்கள், அவர்களின் வதிவிடத்தை அண்டிய பாடசாலைகளுக்கே நியமிக்கப்பட்டுள்ளனர். வெற்றிடங்களின் அடிப்படையில், பாட ரீதியாக ஒருசில ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும், மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடங்களைப் போன்று பிற மாகாணப் பாடசாலைகளுக்கு எந்தவொரு ஆசிரியரும் நியமனம் செய்யப்படவில்லை. கடந்த வருடங்களில் பிற மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை கருத்திற்கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இரு வருட உள்ளகப் பயிற்சியினையும் ஒரு வருட பாடசாலைக் கற்பித்தல் பயிற்சிகளையும்பெற்ற டிப்ளோமாதாரிகளே ஆசிரியர் நியமனக் கடிதம் பெறவுள்ளனர். இவர்களில் தமிழ், ஆங்கிலம், சிங்களம், மொழி டிப்ளோமாதாரிகள் அடங்குவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக