23 மே, 2011

சிறைச்சாலைகளில் கூரையில் ஏறி கைதிகள் போராட்டம்

வெலிக்கடை, போகம் பரை மற்றும் மஹர சிறைச் சாலைகளின் கூரைகளில் ஏறி சுமார் 50 பேர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வெலிக்கடை சிறையின் கூரையில் 25 கைதிகளும், போகம் பரை சிறையில் 21 கைதிகளும், மஹர சிறையில் நால்வரும் இவ்வாறு கூரைகளில் ஏறி உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட்டதோடு பதாதைகளையும் தாங்கி நின்றனர்.

கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை வெலிக்கடை சிறையின் கூரையில் ஏறிய நான்கு கைதிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1989க்கு முன்னர் இடம்பெற்ற பொது மன்னிப்பு காலத்தை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மரண தண்டனை மற்றும் ஆயுட் தண்டனை கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று சிறைக் கைதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகநிலை தோன்றியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்தார்.

மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து மஹர சிறைச்சாலையின் கூரையில் ஏறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய கைதிகள் போராட்டத்தைக் முடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளதாகவும், போகம்பரை சிறையின் கூரையில் ஏறி உண்ணாவிரத போராட்டம் நடத்திவரும் கைதிகளும் இதேபோன்று தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

நல்ல ஒழுக்கத்தை பேணும் கைதிகள் வருடத்துக்கு ஒரு முறை வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான சிபாரிசு நீதி அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கைதியின் பிரதிநிதிகள் ஏற்றிக்கொண்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறினார்.

கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளை கீழே இறங்கச் செய்யும் அடிப்படையில் செயலாற்றவில்லை என்றும், அவர்களுக்கு வழங்கக் கூடிய நிவாரணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக