23 மே, 2011

ஆளுமை பயிற்சித்திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை

பல்கலைக்கழகம்

உயர் கல்வியமைச்சு அறிவிப்பு; திட்டமிட்டபடி தொடரும்

பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்கும் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கான ஆளுமை பயிற்சியை இடைநிறுத்துமாறோ அல்லது ஒத்திவைக்குமாறோ எந்தவித மான உத்தரவுகளையும் பிறப்பிக்கவி ல்லையென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண அரசாங்கத் தகவல் திணைக்களத் துக்குத் தெரிவித்துள்ளார்.

ஆளுமை பயிற்சித்திட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் எம்மிடம் கோரியிருந்தது. எனினும், இப்பயிற்சித் திட்டத்தை 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப் பட்டிருப்பதுடன், இதற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் நாம் நீதிமன்றத்துக்குப் பதிலளித்துள்ளோம் என்றார்.

மூன்று வாரங்களைக்கொண்ட இந்த ஆளுமை பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தங்குமிட வசதிகள், உணவு, சீருடை என்பன வழங்கப்படும். 185 மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் 22,000 மாணவர்களுக்கும் ஆளுமை பயிற்சி கட்டாயமாக வழங்கும் திட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது. 10,000 மாணவர்கள் இன்று தமது பயிற்சிகளை ஆரம்பிக்கின்றனர்.

இந்த ஆளுமை பயிற்சியானது மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சி இல்லையென்று தெரிவித்திருக்கும் அவர், பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்கள் தமது திறமைகளையும், ஆளுமையையும் வளர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே இப்பயிற்சி வழங்கப்படுவதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக