5 மே, 2011

ஸ்பெக்ட்ரம்: சிதம்பரத்தை விசாரிக்க பாஜக கோரிக்கை




இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக தற்போதைய உள்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்திடம் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வியாழனன்று பாஜக தலைவர் நிதின்கட்கரி மற்றும் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

அப்போது பேசிய யஷ்வந்த் சின்ஹா, உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தபோது, சிதம்பரம் தான் நிதியமைச்சராக இருந்தார். ராசா சொல்வதையெல்லாம் அவர் கேட்டுக்கொண்டார். அதனால், 2ஜி விவகாரம் தொடர்பாக சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தும்வரை விசாரணை முழுமையடையாது. இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று அப்போது சிதம்பரம் சொல்லியிருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் அப்படிப்பட்ட ஒரு பரிந்துரையை அளித்தார் என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் கரும்புள்ளி இருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும்,’’ என்றார் பாஜகவைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா.

யஷ்வந்த் சின்ஹாவின் இந்த புகார் தொடர்பாக ப.சிதம்பரம் இதுவரை தனது கருத்துக்களை வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக