5 மே, 2011

உலகின் கொடிய பயங்கரவாதி பிரபாகரன் என்கிறார் அமைச்சர் டலஸ்


உலகின் பயங்கரவாத தலைவர்களின் பட்டியலில் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் முதல் ஸ்தானத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாகவே சமீபத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் உளவுப் படையினால் படுகொலை செய்யப்பட்ட ஒஸாமா பின்லேடன் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை யுத்த முனையில் சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவமும் அரசாங்கமும் மனித உரிமைகளை மீறி யுத்த குற்றத்தை இழைத்திருப்பதாக தருஸ்மன் அறிக்கை திட்டவட்டமாக கூறுகின்றது.

அதே நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் நிராயுதபாணியாக இருந்த பின்லேடனை அமெரிக்க உளவுப் படையினர் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறலும் அல்ல, யுத்தக் குற்றச்சாட்டும் அல்லவென்ற நிலைப்பாட்டில் ஐ.நா. உயர் அதிகாரிகள் இருப்பதனால் தான் இதுபற்றி மெளனம் சாதித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதுவர் தருஸ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களில் ஒன்றை தாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். நாம் விசாரணைகளை மேலெழுந்தவாரியாக மேற்கொண்டு போதியளவு ஆதாரங்கள் இல்லாத நிலையிலேயே இந்த அறிக்கையை தயாரித்ததாக தருஸ்மன் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக ரஷ்யத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து இந்த தருஸ்மன் அறிக்கை அதிகாரமற்ற ஒரு அறிக்கை என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக