அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார்.
ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அல் குவைதாவின் நிறுவனரான பின் லாடன் மிக கொடுரமான பயங்கரவாதச் செயல்களைப் புரிந்ததாக தானே ஒத்துக் கொண்டிருந்தாலும் - பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதே நேரம், ஆயுதமற்ற ஒருவரை கொன்றது தனக்கு சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்துவதாக அங்கிலிகன் திருச்சபையின் தலைவரான ரோவான் வில்லியம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் விசாரணை
இதேவேளை ஒசாமா பின் லாடன் தன் நாட்டிலிருந்ததை தனது உளவு நிறுவனங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனதாக கூறப்படுவது தொடர்பாக ஒரு விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாக மூத்த பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஞாயிற்றுக் கிழமை இரவில் ஒசாமா பின் லாடன் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அவரை கொன்ற தாக்குதல் நடவடிக்கை குறித்து தமக்கு எவ்வித விவரமும் முன்னதாக தெரிவிக்கப்படவில்லை என்று பாகிஸ்தானிய இராணுவத் தளபதிகள் கூறியுள்ளனர்.
ஒசாமா பின் லாடனின் மூன்று மனைவிகளை தற்போது தாம் தடுத்து வைத்திருப்பதாக கூறியுள்ள அவர்கள், அதில் ஒருவர் யெமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஒசாமா பின் லாடனுடன் தான் அந்த வீட்டில் ஒரு அறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வாழந்து வந்ததாக விசாரணையின் போது தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.
இந்த வீட்டில் மொத்தமாக 13 குழந்தைகள் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக