1 மே, 2011

இன, மத, மொழி, கட்சி, பிரதேச வேறுபாடுகளை மறந்து நாட்டின் இறைமையை பாதுகாக்க

இன, மத, மொழி, கட்சி, பிரதேச வேறுபாடுகளை மறந்து
நாட்டின் இறைமையை பாதுகாக்க ஒன்றிணையும் மக்கள் பேரணி
இன்று கொழும்பில் கூடும் மக்கள் ஜனத்திரள்
சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கைக்கு எதிர்ப்பு


சர்வதேச அழுத்தங்கள், சதி முயற்சிகளை முறியடிக்கும் வகையில் இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் விதத்தில் தொழிலாளர் வர்க்கத்தினருடன் இனம், மதம், மொழி, கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஓரணி திரளும் மேதினமாக இன்றைய மே தின ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.

போர்க்குற்றவாளியாக இலங்கையை சித்தரிக்க முயலும் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை கண்டித்தும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவும் முயலும் சர்வதேச சதி முயற்சிகளை கண்டித்தும் தொழிலாளர் வர்க்கத்தினருடன் மக்கள் இன்று அணி திரள்கின்றனர்.

கொழும்பிலும், மலையகத்திலும் வெவ்வேறு பகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் மேதின ஊர்வலங் களையும் மேதின கூட்டங்களையும் நடத்தினாலும் சர்வதேச சதி முயற்சிகளிலிருந்து இலங்கையின் இறைமையை பாது காப்பதை பிரதான நோக்காகக் கொண்டதாகவே அமையவுள்ளன.

தொழிலாளர் வர்த்தகத்தினரின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கத்தில் நடைபெறும் மே தின ஊர்வலங்கள் வரலாற்றில் முதல் முறையாக இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் அணி திரளும் மேதினமாக நடைபெறுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதின ஊர்வலம் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட லட்சக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க மேதினமாக கொழும்பு மாநகர சபை முன்றலில் நடைபெறுகிறது.

“பிறந்த மண்ணுக்கு ஒரு துளி வியர்வை, நாட்டை காப்பதற்கு மக்கள் அரண்" என்ற தொனிப்பொருளுக்கு அமைய மக்கள் ஓரணியாக திகழ்கின்றமை வரலாற்றில் ஒரு எடுத்துக் காட்டாக அமையும் என அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.

பொரளை கெம்பல் மைதானத்தில் ஆரம்பமாகும் ஐக்கிய மே தின ஊர்வலம், பொரளை சந்தி, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், அலெக்ஸாண்டர் பிளேஸ், ஊடாக கொழும்பு மாநகர சபை மைதானத்தை வந்தடையும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மே தின கூட்டம் ஆரம்பமாகும். சிரேஷ்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம். பிக்கள், ஆகியோரும், தொழிற்சங்க வாதிகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகள் பலர் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை இன்று இடம்பெறும் மே தினக் கூட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பங்கேற்று அரசாங்கத்துக்கு முழு ஆதரவை வழங்குவதுடன் ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு தமது ஒட்டு மொத்தமான எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக