1 மே, 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்ததால் அரச தரப்பு அதிருப்தி



ஆதாரமற்ற ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்று ஆதரித்து அறிக்கை வெளியிட்டது தொடர்பாக அரசாங்கத் தரப்பினர் அதிருப் தியை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே அரச தரப்பினர் தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தனர். அத்துடன் இந்த அறிக்கை வெளிநாட்டு தூதுவர்களின் விருப்பப்படி வெளியிடப்பட்டதாகவும் அரச தரப்பினர் பேச்சு வார்த்தையின் போது குற்றம் தாம் அன்று நாடாளுமன்றத்தில் கூறியதையே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையாக வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியதுடன் எவரது தூண்டுகோலுமோ அல்லது ஆலோசனையோ இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதற்கு தேவையில்லை என்று சுட்டிக்காட்டியதுடன் எமது மக்களின் சார்பில் பேசுவதற்கு எமக்கு உள்ள உரிமையின் அடிப்படையிலும், தார்மிக கடமைகளின் அடிப்படையிலுமே ஐ.நா. நிபுணர் குழு தொடர்பாக அறிக்கை வெளியிட்டதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அரச தரப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் போது அரசாங்க தரப்பில் இதுவரை கலந்து கொண்ட, முன்னாள் பிரதமரும் தற்போதைய சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரம நாயக்காவுக்குப் பதிலாக பொது ஜன ஐக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க கலந்து கொள்வார் என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பேச்சுவார்த்தையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசுவதற்கு அரச தரப்பினர் இணங்கியதாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது இது குறித்து ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அதிகார பரவலாக்கல் குறித்த விடயங்களை முன் வைக்குமாறு அரசாங்க தரப்பு கூட்டமைப்பினரை கேட்டுக் கொண்டுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஏற்கனவே தாம் ஒரு பட்டியலை அரசாங்க தரப்பினரிடம் கையளித்திருப்பதால் புதிதாக பட்டியலில் கொடுக்க தேவையில்லை என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கூட்டமைப்பினர் விடுத்த அறிக்கையால் சிங்கள மக்களிடம் கூட்டமைப்பு குறித்து நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் தமக்கு சிக்கல்கள் தோன்றியிருப்பதாகவும் அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக