26 ஏப்ரல், 2011

த.தே. கூட்டமைப்பை அரசாங்கம் 3ஆவது தடவையாகவும் ஏமாற்றிவிட்டது: சுரேஷ்

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விடயத்தில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மூன்றாவது தடவையாகவும் சூட்சுமமாக ஏமாற்றி விட்டது என்று அக்கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருந்த அரசாங்கம், இறுதி நேரத்தில் அந்த உறுதிமொழியை அப்பட்டமாக மீறியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பு கொள்வதையும் தவிர்த்துக் கொண்டமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றேக்ஷிர் மற்றும் உறவினர்களையும் மிகுந்த ஏமாற்றத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை அறிந்த கொள்வதற்கென நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை வவுனியாவிலுள்ள தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்வதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அது பின்னர் ரத்துச் செய்யப்பட்டது. இது தொடர்பில் கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,

சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் இதுவரையில் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. இது அவர்களின் எதிர்கால வாழ்வுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் அளித்திருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்ததுடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களது விபரங்களை வெளியிடுமாறும் வலியுறுத்தி வந்திருந்தது. இதனையடுத்து அவர்களது விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் எமது தரப்பிலிருந்து உறுப்பினர்களை வவுனியா தடுப்பு முகாம்களுக்கு (25) நேற்று திங்கட்கிழமை அழைத்துச் செல்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

எனினும் அங்கு எம்மை அழைத்துச் செல்வதற்கான அறிகுறி எதுவும் தென்படாத காரணத்தினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத் தரப்பினருடன் பலதரப்பட்ட வகையில் தொடர்புகளை மேற்கொள்வதற்கு முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை. அதன் பின்னர் இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தெரிந்து கொள்வதற்கென தகவல்களை அனுப்பப்பட்டன. அதற்கும் பதில் கிடைக்கவில்லை.

எந்த வகையிலும் எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. இவ்வாறு பதிலளிக்காது சூட்சுமமாக இந்த விஜயத்தை அரசு தரப்பு ரத்துச் செய்திருக்கின்றது. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றக்ஷிவது தடவையாகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றது. இது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உகந்ததாக அமையவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக