26 ஏப்ரல், 2011

அவசரகால சட்டவிதிகளை எதிர்காலத்தில் முற்றாக நீக்கும் சாத்தியம்

அரசாங்கம் எதிர்காலத்தில் நாட்டில் அவசரகால சட்டவிதிகளை முழுமையாக அகற்றும் தீர்மானத்துக்கு செல்லும் சாத்தியங்கள் உள்ளன. இதேவேளை எதிர்காலத்தில் அவசரகால சட்டவிதிகளில் அதிகமானவற்றை தளர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். பல்வேறு காரணிகளை ஆராய்ந்துவிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

அவசரகால சட்டவிதிகளை எதிர்காலத்தில் தளர்த்துவது குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில் :

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அரசாங்கம் அவசரகால சட்ட விதிகளின் கணிசமான ஒழுங்குகளை நீக்கியது. ஒரு சில காரணங்களுக்காக அவசரகால சட்டத்தின் சில விதிகளை மட்டும் அரசாங்கம் பேணிவருகின்றது.

இந்நிலையில் விரைவில் அவசரால சட்டத்தின் எஞ்சியுள்ள விதிகளில் அதிகமானவற்றை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. அதாவது விரைவில் சில ஒழுங்கு விதிகள் அகற்றப்படலாம்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் பல்வேறு விடயங்களை ஆராய்ந்துவிட்டு அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை முழுமையாக அகற்றவும் சாத்தியம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றோம். இந்நிலையில் மக்களுக்கு எந்தளவு வசதிகளை வழங்க முடியுமோ அவற்றையெல்லாம் மேற்கொள்வோம் என்றார்.

இதேவேளை அவசரகால விதிகள் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரட்ண கூறியுள்ளதாவது

அவசரகால விதிகளை அரசாங்கம் விரைவில் தளர்த்தவுள்ளது. நீதித்துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தியதன் பின்னர் இது குறித்து ஆராயப்படும்.

அதாவது பொது மக்களின் சாதாரண வாழ்க்கையை பாதிக்கக்கூடிய விதிகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொது மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விதிகளை நாம் ஏற்கனவே தளர்த்தியுள்ளோம். மேலும் பல விதிகளை விரைவில் நீக்கிவிடுவோம். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான விதிகள் மட்டும் நீடித்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக