சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருப்பதை பிணை வழங்க முடியாத குற்றமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கேற்றவகையில் சட்டத்தில் புதிய சரத்துக்களைச் சேர்ப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பவர்க ளிடமிருந்து ஆயதங்களைக் களையும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. சட்டவிரோத ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்கள் வைத்திப்பவர்கள் பிணையில் விடுதலை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் ஆயுதங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
எனினும், ஆயுதச் சட்டத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவிருக்கும் இந்த விசேட சரத்து குறித்த காலத்திற்கு மாத்திரமே அமுலில் இருக்குமென்றும், சட்டவிரோத ஆயுதங்கள் களையப்படவேண்டுமென்ற இலக்கு பூர்த்திசெய்யப்படும்வரை இது அமுலில் இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டவுடன் அங்கிருக்கும் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் காலவரையறை வழங்கியிருந்ததுடன், அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளித்திருந்தது.
நீண்டகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாடு சாதாரண நிலைக்குத் திரும்பியிருக்கும் சூழ்நிலையில் கொள்ளைகள், கொலைகள் அதிகரித்திருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றச்சட்டத்தை முறையாகக் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொலிஸாருக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக