3 பிப்ரவரி, 2011

அத்தியாவசியப் பொருட்களின் விலைக ளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை






அத்தியாவசியப் பொருட்களின் விலைக ளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்; அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து தேசிய விவசாயிகளைப் பலப்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்கி இதற்குத் தீர்வு காணும் வேலைத் திட்டங்களை உடனடியாக முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான குழுவின் அமர்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.இதன் போது அவ்வமர்வில் பங்கேற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ச.தொ.ச. மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கூடாக மக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இவ்வமர்வின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது சந்தையில் நிலவும் அதிகரித்த மரக்கறி விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. குறிப்பாக மரக்கறி போக்குவரத்து நடவடிக்கைகளின் போது இடம்பெறும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உபாயமாக பாதுகாப்பான கொள்கலன்களை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானியங்களை மேலும் முறையாகப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவசாயிகளின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாகவும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

அதேவேளை, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்குக் குறைந்த விலையில் மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அதேபோன்று, அண்மைக் காலமாக அதிகரித்து வரும் தேங்காய் விலையேற்றம் தொடர்பிலும் நேற்றைய அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது. தேங்காய் விலையேற்றத்தைத் தடுக்கும் வகையில் தெங்கு அபிவிருத்தி அமைச்சினூடாக மக்களுக்குக் குறைந்த விலையில் தேங்காயைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு ஜனாதிபதி வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

அத்துடன், கடற்றொழில் கூட்டுத்தாபனம் மீனவர்களிடமிருந்து கொள்வனவு செய்யும் மீனின் தொகையை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இவ்வமர்வில் அமைச்சர்கள் பெஷில் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, எஸ்.பி. நாவின்ன, பி.தயாரத்ன, மஹிந்த சமரசிங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜகத் புஷ்பகுமார ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக