20 ஜனவரி, 2011

எஞ்சிய முகாம்களை நலன்புரி நிலையங்களாக பேண பணிப்பு மட்டு மாவட்டத்தில் 11 முகாம்களில் 2,000 பேர்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு முழுமையான வசதிகளைப் பெற்றுக் கொடுத்து, சுமார் ஒருமாத காலத்திற்கு நலன்புரி நிலையங்களாகப் பேணுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் வெள்ள நீர் வடிவதற்கு ஒரு மாத காலம் வரை செல்லுமென்பதால் அந்த மக்களுக்குத் தேவையான சகல நிவாரண உதவிகளையும் செய்துகொடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற விசேட கூட்டத்தில் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டதாகப் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மட்டு. மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் 11 முகாம்களில் 600 குடும்பங்களைச் சேர்ந்த 2107 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீளப்பெறப்பட்டிருப்பதுடன் தற்போது வேறு அரச கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்முனை தெற்கு, கொக்கட்டிச்சோலை, ஏறாவூர், செங்கலடி, போரத்தீவுப்பற்று, வவுணதீவு, வாகரை, ஓட்டமாவடி ஆகிய இடங்களில் 11 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் இலுப்படிச்சேனை, கொத்தியவளை கரவெட்டி ஆகிய இடங்களில் 186 குடும்பங்கள் தங்கியுள்ளன. மேலும் மகிழவட்டுவான் தேவாலயத்தில் 84 குடும்பங்களும், கண்டவெளி நெற்களஞ்சியசாலையில் 15 குடும்பங்களும் தங்கியுள்ளன.

இவர்கள் தங்கியிருப்பவை தற்காலிக முகாம்கள் என்றாலும் அவற்றில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நலன்புரி நிலையங்களாகப் பராமரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இவர்களின் சொந்தக் கிராமங்களில் நீர் முற்றாக வடிவதற்கு ஒரு மாதம்வரை செல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். முகாம்களில் உள்ளவர்களுக்கு மூன்று வேளை சமைத்த உணவு வழங்கப்படுவதுடன், சொந்த வீடுகளுக்குத் திரும்பியவர்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உலருணவு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் முகாம்களாகப் பயன்படுத்தப்பட்ட சகல பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் கிரமமாக இயங்குமென்றும் பிரதியமைச்சர் கூறினார். பாடசாலைக் கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களைப் புனரமைப்பதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக