வட பகுதியில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி, அப்பகுதி மக்களின் சுதந்திரமான வாழ்க்கை முறைமையை உறுதிப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதனை யார் மீதும் சுமத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை. ஆனால், வட பகுதி மக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நீலிக்கண்ணீர் வடிப்பது நகைச்சுவையாக உள்ளது.
மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு நடந்து கொண்டது என்று எங்களுக்கு தெரியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்து தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டதும் அங்கு ஒரு நாள் தங்கியிருந்ததும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் மக்களின் வாழ்க்கை நிலைமை வழமைக்கு திரும்பவில்லை என்றும் அங்கு பல அசம்பாவிதங்கள் அண்மைக்காலத்தில் இட்ம்பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் அங்கு ஜனநாயகத்தை நிறுவி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் டலஸ் இந்த விடயத்தை கூறினார்.
வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என்றும் அகதி முகாம்களில் எஞ்சியுள்ளவர்கள் விரைவில் மீள்குடியேற்றப்படவேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயம் குறித்து மேலும் கூறியதாவது ஜனநாயகம் பற்றி ஐக்கிய தேசிய கட்சி பேசுகின்றமை நகைச்சுவைக்குரிய விடயமாகும். 1983 ஆண்டில் வடக்கில் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் நடத்தப்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு நடந்துகொண்டது என்று எங்களுக்கு தெரியும். ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சி தற்போது ஜனநாயகத்தை நம்புவது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.
அண்மையில் ஜனாதிபதி வடக்கின் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ஒருநாள் தங்கியிருந்தார். மேலும் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி வடக்கிலோ தெற்கிலோ எப்பகுதியிலும் பாதாள உலகக் கோஷ்டியினர் செயற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.
இங்கு நாங்கள் இரண்டு முக்கிய விடயங்களை பார்க்கவேண்டியுள்ளது. அதாவது நாங்கள் தற்போது யுத்தத்துக்கு பின்னரான இலங்கையில் இருக்கின்றோம். 30 வருடகால யுத்தம் முடிவுற்று ஒன்றரை வருடங்களே கடந்துள்ளன.
வியட்னாம் யுத்தம் முடிந்து 20 வருடங்களின் பின்னரே அந்த நாடு மீண்டு வந்தது. கொரிய யுத்தம் முடிந்து 30 வருடங்களின் பின்னரே அந்த நாடு எழுந்துவந்தது. அழிவடைந்த ஜப்பான் தனது சொந்த அர்ப்பணிப்பினாலேயே பல வருடங்களுக்கு பின்னரே மீட்சியடைந்தது. இரண்டாவது விடயமாக நாட்டின் தென் பகுதியில் இடம்பெறும் தன்மையிலான குற்றச் செயல்களே அண்மைக்காலங்களில் வடக்கிலும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த காரணங்களை நாங்கள் பார்க்கவேண்டும்.
அதற்காக வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களை நான் நியாயப்படுத்தவில்லை. வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி அப்பகுதி மக்களின் சுதந்திரமான வாழ்க்கை முறைமையை உறுதிப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதனை யார் மீதும் சுமத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை. அதனை நாங்கள் செய்துவருகின்றோம். வடக்கை அபிவிருத்தி செய்துவருகின்றோம். உட்கட்டமைப்பு வசதிகளையும் நிர்மாணிக்கின்றோம்.
அப்பகுதியில் ஜனநாயகத்தை நிறுவவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தற்போது பொலிஸ் சேவைக்கு வடக்கிலிருந்து அதிகமான தமிழ் பேசுபவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இது வரலாற்றில் இடம்பெறாத விடயமாகும்.
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கற்பிக்கப்படவேண்டும் என்று அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. வரலாற்றில் இவ்வாறான ஆரோக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக