30 ஏப்ரல், 2011

4000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குழுவுக்குக் கிடைத்தன ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பாகம் (02)

(05) 11. அதன் நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. வின் சிரேக்ஷ்ட அலுவலர்கள், அது செயலாளர் நாயகத்துக்கு அறிக்கை விடுத்து இறுதியில் ஆலோசனை வழங்கிய போதிலும், அதன் ஆணையை நிறைவேற்றுவதில் சுயேச்சையாக நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு அதிகாரம் உண்டு என குழுவுக்குத் தெளிவாக விளக்கியுள்ளனர். மேலும், பின்வரும் சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தை விட்டும் சுயேச்சையாக குழு இருக்கும் என்பதை ஐ.நா. குழுவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

2. குழுவின் காலம் சார்ந்த வரையறைப் பொறுப்பு

12. "யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள்' தொடர்பான கூட்டு அறிக்கையினைச் செயற்படுத்துவது பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழகுவதை வரையறை ஆணை தேவைப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச சட்டப் பாரிய மீறல்கள் அநேகமானவை நேர்ந்த யுத்தத்தின் மிக உக்கிரமான கட்டத்தை உள்ளடக்கிய 2008 செப்டம்பர் முதல் 2009 மே வரையிலான காலப்பகுதிக்கு குழு கவனம் செலுத்தியது. எல்.ரி.ரி.ஈ. இன் நடப்பிலுள்ள தலைநகரான கிளிநொச்சி மீது அரசாங்கம் இறுதி இராணுவத் தாக்குதல் மேற்கொண்டதற்கு 2008 செப்டெம்பர் ஒத்திருக்கிறது. வன்னியில் செயற்படும் சர்வதேச அமைப்புக்களில் தொழில்புரியும் சர்வதேச பணியாட்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து சர்வதேச யுத்த அவதானிப்பு முடிவடைந்ததற்கும் அது ஒத்திருக்கிறது. 2009 மே மாதம் யுத்தத்தின் முடிவையும் எல்.ரி.ரி.ஈ. இன் இராணுவத் தோல்வியையும் குறிக்கிறது.

13. சூழ்நிலைத் தொடர்பினை வழங்குவதற்காக, மேலே விவரிக்கப்பட்ட இறுதிக் கட்டங்களுக்கு முந்திய விடயங்கள் பற்றி சில சமயங்களில் குழு கலந்துரையாடுகிறது. மேலும், யுத்தத்தின் முடிவுக்கு முன்னர் அல்லது அதனுடன் நெருக்கமாக தொடர்புபட்ட, யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்ந்தவை சில சந்தர்ப்பங்களில் இன்றுவரை இடம்பெறுவது போன்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் பற்றியும் குழு அறிந்துள்ளது. ஆயுதம் தாங்கிய மோதலுடன் நெருக்கமற்ற, குறிப்பாக இலங்கையின் ஏனைய பாகங்களில் தற்போது நடைபெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் பற்றி குழு கவனம் செலுத்தவில்லை. (06) 3. குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பான விடயங்கள்

14. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் தொடர்பாக வரையறை ஆணை உள்ளது. மனிதாபிமான சட்டம் தொடர்பில், மோதல்களில் ஈடுபடாதவர்கள் மற்றும் தொடர்ந்தும் ஈடுபடாதவர்கள் அத்துடன் நலன்புரி வழிகள் மற்றும் முறைமைகள் தொடர்பான ஜெனீவா கோட்பாடுகளில் வழங்கப்பட்டுள்ள தோதான வழக்கமான விதிமுறைகள் பற்றி குழு கவனம் செலுத்துகிறது. மனித உரிமைகள் சட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஒப்புதல் அளித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்கள் மீது கவனம் செலுத்தி அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் அத்துடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் ஆகியவை பற்றி குழு கவனம் செலுத்துகிறது. இந்நடவடிக்கையின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஆயுதந் தாங்கிய மோதல் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் பரஸ்பரம் ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துவதை குழு நினைவூட்டுகிறதோடு, நிலையான சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவை மீது அவற்றின் விளைவான தாக்கத்தையும் இனங்காண்கிறது. இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் அத்துடன் பொறுப்புக் கூறல் பற்றிய ஏனைய சட்டங்கள் உள்ளடக்குகிறது என்ற அளவில்,இலங்கையின் சட்டம் மற்றும் தோதான நிறுவனங்களும் ஆராயப்படுகின்றன. இறுதியாக, யுத்தத்தின் முக்கிய பாத்திரங்களான அரசாங்கம் மற்றும் எல்.ரி.ரி.ஈ. ஆகியவற்றின் மீறல்கள் பற்றிய குற்றச் சாட்டுக்களை குழு ஆராய்கிறது.

(07) (இ) செயற்றிட்டம்

15. ஆய்வுரிமை வரம்பின் படி, குழு அதற்கே உரித்தான முறைமைகளை அபிவிருத்தி செய்வதோடு, செயலகமொன்று அதற்கு உதவி வழங்கும். 2010 செப்டெம்பர் நடுப்பகுதி அளவில் அதன் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பினுள் தொழில் புரியும் நெறிசார்ந்த தொழில்புரிவோர்களிடையே இருந்து செயலகம் ஒன்று திரட்டப்பட்டது. மேலும், வேறு வகையாய் கிடைக்காத ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக புற உசாத்துணையாளர்களின் சேவையை குழு பெற்றுக் கொண்டது. ஐக்கிய நாடுகள் செயலகத்தில் ஏற்கனவே உள்ள பல்வேறு திணைக்களங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மேற்கோள் குழுவொன்றும் குழுவுக்கு உதவியளித்தது.

16. குழுவின் செயல் திட்டம் இரு கட்டங்களாக நெறிப்படுத்தப்பட்டது. முதற் கட்டத்தில், அதன் ஆய்வுரிமை வரம்பு தொடர்பான நிபுணத்துவம் அல்லது அனுபவம் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் பற்றிய பல்வேறு தகவல்களை குழு சேகரித்தது. இவ்வாறான சில தகவல்கள் எழுத்து வடிவத்தல் உதா: அரசாங்க, ஐ.நா. அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகள் மற்றும் குழுவுக்கு இரகசியமான முறையில் வழங்கப்பட்ட தகவல்கள் மூலமாகக் கிடைத்தன. ஏனைய தகவல்கள் குழுவின் பல கூட்டங்கள் மற்றும் அதன் செயலகத்தின் மூலமும் பெறப்பட்டன. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது நடந்தேறிய நிகழ்வுகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்கள் அத்துடன் அரசாங்கங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருடன் குழு சந்திப்புக்களை நடத்தியது. அதன் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் போது, குழு இவ்வறிக்கையின் நகலைத் தயாரித்தது. பிரசுரிப்பதற்கு ஏதுவான வகையில் இவ்வறிக்கை வரையப்பட்டது.

17. பரவலாக பொதுமக்களின் தொடர்பு கொள்வது தொடர்பில், அக்கறைகொண்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் எழுத்து மூலமாக முறையீடுகளைச் சமர்ப்பிக்குமாறு பொதுவானதொரு அழைப்பு விடுக்கப்பட்டது. 2010 ஒக்டோபர் 21ஆம் திகதி, குழுவின் பணியாட்டொகுதித் தலைவர், அறிவித்தலின் பிரதியொன்றை இணைத்து அது ஐ.நா. இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்து இத்தீர்மானம் பற்றி இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆங்கில அறிவித்தல் 2010 ஒக்டோபர் 27 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டதோடு, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான அறிவித்தல்கள் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கு ஆரம்பத்தில் கடைசித் திகதியாகக் குறிப்பிடப்பட்ட 2010 டிசம்பர் 15ஆம் திகதி பின்னர் 2010 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. 2010 டிசம்பர் 31ஆம் திகதி இருந்தவாறாக, 2,300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 4,000 க்கும் அதிகமான முறையீடுகள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன.

(08) 18. குறிப்பிட்டதொரு வகைகளிலான மீறல்கள் அல்லது இறுதிக் கட்டங்களின் போதான குறிப்பிட்டதொரு காலப்பகுதிகள் தொடர்பானதாக மற்றும் மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் குறித்துரைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறையீடுகளில் கணிசமானவை இருந்தன. ஆவணப்படுத்தப்பட்ட தகவல், நிகழ்வுகளின் பட்டியல்கள் அல்லது பாதிக்கப்பட்டோர், நிழற்படங்கள் மற்றும் வீடியோப் படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கின. பாரபட்சமற்றவையாக பகுப்பாய்வு ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட சில முறையீடுகள் பொதுவான தகவல்கள், போக்குகள் அல்லது நிலைமை பற்றிய குறிப்பின் அம்சங்களின் பகுப்பாய்வினை வழங்கின. பொதுவான தகவல்கள் ஊடக அறிக்கைகள், இணையத் தொடர்புகள் பொதுவாகக் கிடைக்கக் கூடிய மூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான விளக்கங்கள் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முறையீடுகளில் அடங்கின. இறுதியாக, உண்மையினை அடிப்படையாக அல்லது பகுப்பாய்வினைக் கொண்டிராத நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பான பரிந்துரைகளைச் செய்யுமாறும் குழுவினை வேண்டிக் கொண்டவை பெறப்பட்ட கணிசமான முறையீடுகளில் அடங்கின.

19. முறையீடுகளை ஒவ்வொன்றாக குழுவினால் சரி பிழை பார்க்க முடியவில்லை என்பதால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தன்மையினை நிறைவு செய்யவும் குழுவின் நியதிக்கேற்ப அவை நேரடி மூலமாகப் பாவிக்கப்படவில்லை (அத்தியாயம் டிடி அ பார்க்கவும்). சில விடயங்களில், முறையீடுகள் தகவலின் ஏனைய மூலங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவின. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக மாத்திரமன்றி மேலும் விரிவாக கடந்த காலம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை குழுவின் காலம் சார்ந்த ஆணைக்கு முன்பதான நிகழ்வுகளை உள்ளிட்டதாகக் கிடைக்கப்பெற்ற கணிசமான முறையீடுகள் வலியுறுத்திக் காட்டுகின்றன.

ஈ. இலங்கை அரசாங்கத்துடனான இணைச் செயற்பாடு 20. அதன் ஆரம்பந்தொட்டு, அதன் ஆணையை அமுல் செய்வது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி பொறுப்புக்கூறும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்தின் நோக்கம் எவ்வாறாக உள்ளது என்பதை அறிவதற்காகக் குழு விருப்பம் கொண்டிருந்தது. உண்மையிலேயே, குழு அரசாங்கத்துக்கானதொரு மூலவளமாகச் செயற்படலாம் என்பதாக குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் செயலாளர் நாயகம் தன் நம்பிக்கையைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, உள்நாட்டிலேயே அபிவிருத்தி செய்யப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றியதொரு பொறித்தொகுதி என பகிரங்கமாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ள கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவுடன் தொடர்புகளைப் பேணுவது பெறுமதி மிக்கதாகும் என்ற நிலைப்பாட்டின தொடர்ச்சியுமாகக் குழு பேணி வந்துள்ளது. அதேநேரத்தில், பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் ஏனைய உள்நாட்டு நிறுவனங்களுக்கும் பாரியதொரு பங்களிப்பு உண்டு என குழு கருதியதோடு, அரசாங்கத்தினுடாக அவற்றுடனும் தொடர்புகளைப் பேண குழு முயற்சிகளை மேற்கொண்டது.

(09) 21. இவ்விளக்கம் எடுத்துக் காட்டுவது போன்று, 2010 செப்டெம்பர் ஆரம்பத்தில் இருந்து குழு அதன் ஆணையை நிறைவு செய்யும் சந்தர்ப்பம் நெருங்கும் வரை, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட சொல் மூலமும் எழுத்து மூலமும் பலதடகைள் குழு முயற்சியினை மேற்கொண்டது. குழுவின் நோக்கெல்லை செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதாக உள்ளதாகவும் ஏதும் புலனாய்வினை மேற்கொள்வதில் அது ஈடுபடவில்லை என்பதை உள்ளிட்டவாறு இலங்கை அரசாங்கத்துக்கு குழுவும் ஐ.நா. அலுவலர்களும் பலதடவை தெளிவுபடுத்தியுள்ளனர். குழுவுடன் எதுவிதத் தொடர்பாடலும் இன்றிப் பல மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் குழுவுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அத்தகைய விஜயத்துக்கான ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடாமல் அதன் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டது. குழு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவுக்கு "பிரதிநிதித்துவங்களை' மாத்திரம் செய்யலாம் என 2010 டிசம்பர் மாதம் கடித மூலம் அரசாங்கம் வற்புறுத்திய போதிலும் நாட்டுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கான அதன் விருப்பத்தைக் குழு வலியுறுத்தியது. இதனையும் 2011 ஜனவரி ஆரம்பத்தில் வழங்கிய குறிப்பொன்றின் மூலம் அரசாங்கம் நிராகரித்ததோடு அதன் பின்னர் விஜயம் பற்றி மேற்கொண்டு எதுவித தொடர்பினையும் பேணவில்லை. மாறாக, கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாடு பற்றிய ஆணைக்குழு மற்றும் ஏனைய உள்நாட்டுப் பொறித்தொகுதிகள் பற்றிய குழுவின் கேள்விகளுக்கு எழுத்து மூலமான பதிலை ஜனவரி இறுதி அளவில் அனுப்பி வைத்ததோடு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் எந்தவொரு உறுப்பினரையும் உள்ளடக்காத சிறியதொரு தூதுக்குழுவினை நியூயோர்க்குக்கு அது அனுப்பி வைத்தது.

22. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டுள்ள பலதரப்பட்டட அதிகாரிகளைக் குழு சந்திப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதையிட்டு குழு கவலை தெரிவிக்கிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது அதன் நடவடிக்கைகளுக்கு அவசியமானதல்ல என்றிருந்த போதிலும், கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு மற்றும் அரசாங்க அலுவலர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை மேலும் நேரடியாகக் கேட்டு அவர்களுடன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு (வேறு வழிகளில் உத்தியோகபூர்வ கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு குழு முடிந்த போதிலும்) குழுவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும். எழுத்து மூலமான பதில்களையும் இலங்கை அதிகாரிகளுடனான நேருக்கு நேரான உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை குழு வரவேற்ற போதிலும், அப்படியானதொரு ஈடுபாட்டிற்காக குழு முயற்சி செய்யவில்லை.

உ. குழுவினது பதிவுகளின் இரகசியத் தன்மை

23. பின்னர் தகவலைப் பிரயோகிப்பது பற்றிய முழுமையான இரகசியத்தன்மையின் உறுதிப்பாட்டின் பேரில் சில சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமான மற்றும் வாய் மூலமான சமர்ப்பணங்கள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன. இது பற்றி அறிவுரை வழங்கிய சட்ட விவகாரங்கள் அலுவலகம், செயலாளர் நாயகத்தின் "தகவலின் பதிவு நுட்பத்தன்மை, வகைப்படுத்தல் மற்றும் கையாளுதல்' தொடர்பான அறிக்கையின் (குகூ/குஎஆ/2007/6) ஏற்பாடுகளை அதன் பதிவுகளுக்கு உரியதாய்க் கருதலாம் என உறுதிப்படுத்தியது. ஒரு (10) ஆவணத்தை "கண்டிப்பான இரகசியத்தன்மை' என வகைப்படுத்தி அதற்கான பிரவேசத்தை 20 வருட காலத்துக்கு மட்டுப்படுத்துவதோடு அதனைத் தொடர்ந்தும் தடுத்து வைத்தல் அல்லது வெளியிடுதல் தொடர்பான நியாயம் பற்றிய மீளாய்வொன்றை மேற்கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாட்டினை இவ்வறிக்கை விளக்குகிறது. மேலும், குழுவின் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் மற்றும் தோதானவிடத்து, பின்னர் பிரயோகிப்பது தொடர்பான கண்டிப்பான இரகசியத்தன்மை பற்றிய உறுதிப்பாட்டினை குழு வழங்கலாம் என்பதை சட்ட விவகாரங்கள் அலுவலகங்கள் உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக, குழுவின் பொருள் செறிந்த பதிவுகள் கிட்டத்தட்ட முழுமையாக "கண்டிப்பான இரகசியத்தன்மை' எனவும், சில விடயங்கள் தொடர்பாக எதிர்கால பாவனை பற்றிய மேலதிகப் பாதுகாப்புடனும் வகைப்படுத்தப்படும்.

டிடி. மோதலுக்கான வரலாற்று ரீதியிலான மற்றும் அரசியல் பின்னணி

24. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் நடைபெற்று வந்த மூர்க்கத்தனமான மோதலின் பின்னர், 2009 மே 19ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) மீதான அதன் வெற்றியை இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியது. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டதோடு, அவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவுக்குப் பொறுப்பு சாட்டப்பட்டது. இலங்கையின் சிக்கலான மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் வரலாற்றினை கூறுபடுத்தி ஆராய்வது குழுவின் பணியல்ல. இருந்த போதிலும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை தோதான அரசியல் மற்றும் சமூகப் பின்னணியின் கண்ணோட்டத்தில் ஆராய்வதற்காக, மோதலின் வரலாற்றின் சில அம்சங்களை கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என குழு கண்டது.

25. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு இந்தியாவின் தென் கிழக்குக் கரைக்கு 18 மைல்களுக்கு அப்பால் இந்திய சமுத்திரத்தில் உள்ள தீவு தேசமாகும். இலங்கை 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இனத்துவ, மொழிவாரியான அத்துடன் சமயம் தொடர்பான பன்முகத் தன்மையுடையதொரு நாடு என்பதோடு, அதில் 74 சதவீதத்தினர் அதிகமாக பௌத்தர்களை உள்ளடக்கிய சிங்கள மொழி பேசும் சிங்களவர்களாகவும், 18 சதவீதத்தினர் அநேகமாக இந்துக்களான தமிழ் மொழியைப் பேசும் தமிழர்களாகவும் (இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய தமிழர்கள் என முறையே 13 சதவீதத்தையும் 5 சதவீதத்தையும் உள்ளடக்கியதாக), மற்றும் 7 சதவீதத்தினர் இஸ்லாம் மதத்தை அனுஷ்டிக்கும் பொதுவாகத் தமிழ் மொழியைப் பேசும் சோனகர்கள் மற்றும் மலேயர்களைக் கொண்ட முஸ்லிம்களாகவும் மற்றும் 1 சதவீதத்தினர் ஏனையவர்களுள் பறங்கியர் மற்றும் ஆதிவாசிகளைக் கொண்ட சிறிய இனத்துவச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சில சமூகங்களில் சிறிய வீதத்தினராக கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

26. முதலில் போர்த்துக்கேயர், அடுத்து ஒல்லாந்தர் மற்றும் இறுதியாக பிரித்தானியர்களின் 4 நூற்றாண்டுகள் தொடர்ந்த காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர். பிரித்தானியாவிடம் இருந்து 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு இனத்துவச் சமூகங்களை உள்ளடக்கியதாகச் சிங்களவர் ஆதிக்கம் செலுத்தும் சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் இலங்கையை ஆட்சி செய்து வந்தது. சகலருக்குமான வாக்குரிமை, பல்கட்சி அமைப்பு மற்றும் துடிப்பானதொரு தேர்தல் செயற்பாடு, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு சாராருக்குமான உயர் நிலையிலான எழுத்தறிவு, குறைந்த சிசு மரண வீதம் போன்ற முக்கியமான மனித அபிவிருத்திச் சித்திகள் ஆகியவற்றை உள்ளிட்ட உறுதியான ஜனநாயகச் சுட்டிகளை இலங்கையின் நீண்ட கால யுத்தம் பற்றிய வரலாற்றுடன் தெளிவாக ஒப்பிடக் கூடியதாகவுள்ளது

(11) அ. இனத்துவமும் அரசியலும்

27. அரசியல் மற்றும் இனத்துவக் கோடுகளூடான ஆழமானதொரு விரிசலின் வன்முறைப் பிரதிபலிப்பாக இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் இருந்துள்ளது.

1. இனத்துவம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றம் 28. சுதந்திரத்தின் பின், அரசியல் பிரமுகர்கள் குறுகிய கால அரசியல் இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்கி, நீண்ட கால கொள்கைகளுக்கு மேலாக சமுதாயம் சார்ந்த அத்துடன் இனத்துவ வாத மன உணர்ச்சிகளை கவர்வதற்கான ஒரு போக்கினைக் கொண்டிருந்தனர். நீண்ட கால கொள்கைகள் பிரஜைகளின் பல்கலாசார இயல்பினைப் போதியளவு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகலரையும் உள்ளிட்டதொரு நாட்டைக் கட்டியெழுப்பியிருக்கலாம். இத்தகைய செயற்பாடு மற்றும் பிரிவுகள் காரணமாக ஒருமைப்படுத்தும் தேசிய தனித்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சிங்களபௌத்த தேசியவாதம் செயற்பட ஆரம்பித்தது, பௌத்த மதத்தின் பரிசுத்த இல்லமாகிய இலங்கையின் பாதுகாப்பாளர்கள் என்பதாக சிங்களவர்களுக்கு தனிச்சிறப்பினைக் கொண்டதொரு தன்மையை வலியுறுத்தியது. இக்காரணிகள் இலங்கையில் நாடு, அரசாட்சி மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்புகளைப் பாழாக்கி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியது.

29. 1970ஆம் ஆண்டுகளில், ஒரு புறம் வகுப்பு அடிப்படையிலான ஓரங்கட்டலால் விரக்தியடைந்த தெற்கின் இளம் சிங்களவர்கள் மற்றும் இனத்துவ அடிப்படையிலான ஓரங்கட்டலால் விரக்தியடைந்த வடக்கைச் சேர்ந்த இளம் தமிழர்கள் மறு பக்கம் உருவாகி வரும் நாடு சம்பந்தப்பட்ட வகையில் வெவ்வேறு விதமான எதிர்ச்செயலில் ஈடுபட்டு, தீவிரவாதத்தின் பக்கம் திரும்பி, அரசுக்கு எதிரான ஆயுதந்தாங்கிய புரட்சிகளில் ஈடுபட்டனர். அரசாங்கம் இவ்வியக்கங்களை தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகக் கணித்து, அடிப்படையான அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதை விடுத்து, அரச அதிகாரத்துக்கு எதிரான சவால்களான காணாமல்போதல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட அடக்குமுறையினைக் கொண்டு எதிர்கொண்டது.

30. வேறுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து, காந்தியின் அகிம்சா வழியைப் பின்பற்றி ஆரம்பித்த உரிமைகளுக்கான தமிழ் போராட்டம், தனி நாடு என்ற கோரிக்கையை மையமாகக் கொண்டு மேலும் மேலும் தமிழ் தீவிரவாதம் மற்றும் ஆயுதம் ஏந்திய புரட்சியை தோற்றுவித்தது. ஒத்துப்போவதில் இருந்து பிரிவினை வாதத்துக்கு கலந்துரையாடல் மாறியபோது, 1970ஆம் ஆண்டுகளில் எல்.ரி.ரி.ஈ. உள்ளிட்ட பல தமிழ் அரசியல்தீவிரவாதக் குழுக்கள் தோன்றின. ஆயுதந்தாங்கிய தமிழ் குழுக்கள் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்குச் சமாந்தரமாக சிங்கள தேசியவாதிகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட கடுமையான அடக்கு முறை தீவிரமடைந்தது. 1977, 1979, 1981 மற்றும் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசாங்கத்தில் இருந்த சில சக்திகள் உற்சாகப்படுத்தின அல்லது சில சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு அனுசரணை வழங்கின. இந்த வன்முறை 1983இல் ஆகப் பரவலாக நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களின் உச்ச நிலையை அடைந்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் சிங்களக் கும்பல்கள் போக்குவரத்துச் செய்யப்பட்டதோடு தமிழர்களை இனங்கண்டு அவர்களை இலக்குப் பார்ப்பதற்காக உத்தியோகபூர்வமான வாக்காளர் பதிவேடுகள் பிரயோகிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு பாரிய அளவில் இடம் பெயர்வு, தமிழர்களின் சொத்துக்களுக்கான சேதம் அத்துடன் தமிழர்களின் புலம்பெயர்வு நேர்ந்தது. வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் 13 இலங்கை இராணுவ வீரர்களை எல்.ரி.ரி.ஈ. கொலை செய்ததற்குப் பதிலாக இத்தாக்குதல்கள் நடைபெற்றதாக அரசாங்கம் உறுதியாகக் கூறியது. இவ்வாறாக, 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் இரு தரப்பினருக்கிடையிலான வன்செயல்கள் நேர்ந்த போதிலும், அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ. இனருக்கும் இடையிலான யுத்தத்தின் ஆரம்பம் 1983 எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. 2. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) 31. 1983ஆம் ஆண்டின் இனக் கலவரங்களுக்குப் பின்னர் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை மும்முரமடைந்த போது, தமிழ் சமூகமும் மேலும் தீவிரவாதத்தில் ஆழ்ந்து, தமிழ் நாட்டில் பயிற்சி மற்றும் அமைப்புக்கு ஏதுவான சூழலைப் பிரயோசனப் படுத்தியதோடு, தீவிரவாதக் குழுக்களின் அணிகளும் அதிகரித்தன. தமிழ் விடுதலை இயக்கமாக ஆரம்பித்த எல்.ரி.ரி.ஈ, நாளடைவில் மிகவும் ஒழுங்கு சார்ந்த மற்றும் தமிழ் தீவிரவாதக் குழுக்களிடையே மிகவும் தேசியவாதத்தைக் கொண்டதாகவும் மாறி 1980ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை அரவணைக்கும் தலையாய சக்தியாக தலைதூக்கியது. இக்கால கட்டத்தின் போது, எல்.ரி.ரி.ஈ. ஏனைய தமிழ் குழுக்களை பணிய வைப்பதற்காக கூடிய அளவிலான வன்முறைப் போக்கினைக் கடைப்பிடித்ததோடு, தாமாகவே நியமிக்கப்பட்டட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். அதன் புதிரான தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன், முழுமையான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் அதிகாரத்துடன் கோரியதோடு பக்தி சார்ந்ததொரு ஆதரவாளர்களை உருவாக்கினார். தமக்குள்ளே எந்தவொரு கருத்து வேறுபாட்டையும் சகிக்காததோடு, அரசாங்கத்துடன் செயற்படுவோர் அல்லது ஒத்துழைப்போர் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அநேகமாக எல்.ரி.ரி.ஈ. இனால் கொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எல்.ரி.ரி.ஈ. இன் வன்முறை தமிழ் சமுதாயத்தினுள் ஆழ்ந்த பயத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக