30 ஏப்ரல், 2011

அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் 12 இல் சந்திப்பு

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது, அதிகாரப்பகிர்வு தொடர்பில் அரசாங்கம் தனது பங்காளிக்கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளினது பெயர்ப்பட்டியலைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதெனவும் இப்பேச்சுவார்த்தையின் போது அரச தரப்பினர் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சட்டத்தரணி எம்.சுமந்திரன் ஆகிய எம்.பி.க்களுடன் சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் அரச தரப்பிலிருந்து அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் எம்.பி.க்களான ரஜீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்றைய பேச்சின்போது இது வரையில் கலந்துகொண்டிருந்த சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்துகொண்டிருக்கவில்லை. அவருக்குப் பதிலாகவே ரஜீவ விஜேசிங்க எம்.பி. இணைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய சந்திப்பு தொடர்பில் சுரேஷ் எம்.பி. மேலும் தகவல் தருகையில், அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பல சுற்றுக்களாக பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

நேற்றைய பேச்சுக்களின் போது அதிகாரப்பகிர்வு தொடர்பிலான ஆரம்பக்கட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மாகாண சபைக்கும் மத்திய அரசுக்குமிடையிலான பொதுவான தன்மைகள் குறித்தும் பேசப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளினது ஆலோசனைகளையும் பெறவேண்டியிருப்பதால் அவற்றுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்த அரச தரப்பு பேச்சுவார்த்தைக்குழு, ஏனைய கட்சிகளினது ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் மீண்டும் மே மாதம் 12ஆம் திகதி சந்தித்து பேசுவதற்கும் ஆலோசனையை முன்வைத்தது. அரச தரப்பின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்றைய தினம் மீண்டும் சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

மேலும் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அன்றாட பிரச்சினைகள், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விடயங்கள் மற்றும் அவர்களின் விபரங்களை அறிவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைத்துச் செல்லப்பட இருந்தும் இறுதி நேரத்தில் அரச தரப்பினக்ஷில் அது தவிர்க்கப்பட்ட நிலைமைகள் தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டன.

இதற்குப் பதிலளித்த அரச தரப்பினர், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது பெயர் விபரங்களை பார்வையிடுவதற்கு அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் இது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிவித்தல்கள் விடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர். அரசாங்கத்தினால் இவ்வாறு பல தடவைகள் இதற்கு முன்னரும் உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் இம்முறை வழங்கப்பட்ட உத்தரவாதமும் எந்தளவு சாத்தியமாகும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

இதேவேளை, தமிழர் விவகாரம் தொடர்பிலான இந்த இருதரப்பு பேச்சுக்கள் நீண்டு கொண்டிருப்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உடன்பாடு இல்லை என்பதையும் இது மிக விரைவில் அதாவது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதகாலப்பகுதிக்குள் நிறைவடைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம்.

இதனை ஏற்றுக்கொண்ட அரசதரப்பு மிக விரைவிலேயே தீர்வுகளைக் கண்டு பேச்சுக்களை நிறைவு செய்து கொள்வதென தெரிவித்திருக்கின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக