30 ஏப்ரல், 2011

வன் ஹாய் கப்பலை காட்சிப்படுத்தி மக்களை மடையர்களாக்க முயற்சி: ஐ.தே.கட்சி



வன் ஹாய் 502 கப்பலை அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்துக்கு கொண்டு வந்ததன் மூலம் நாட்டு மக்களை மடையர்களாக்க முயற்சித்துள்ள அரசாங்கம் தனது ஏமாற்று நடவடிக்கையினூடாக கப்பல் கண்காட்சியொன்றை நடத்தியிருப்பதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பரிகாசித்துள்ளது.

நாடு அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடையூறாக நிற்கப்போவதில்லை. ஆனால் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பதையும்,ஏமாற்று அரசியல் நடத்திக் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எதிர்கட்சிக்கு இருக்கின்றது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பதுளை மாவட்ட எம். பி. ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்:

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்திற்கு சர்வதேச கப்பல் ஒன்று வருகை தந்தமையானது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எனினும் இவ்விடயத்தில் மக்களை மடையர்களாக்கி அவர்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது தான் பாரிய விடயமாகும்.

இந்த துறைமுகத்துக்கு சர்வதேச கப்பல்கள் வருகை தரமுடியாது என ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருந்தது. இதற்காகவே இந்த கப்பல் வருவிக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சர்வதேச கப்பல்கள் வருகை தரமுடியும் என்பதை அரசாங்கம் கப்பல் கண்காட்சி நடத்தியிருக்கின்றது. உண்மையில் இங்கு வருகை தந்த வன் ஹாய் 502 கப்பலானது 4800 கொள்கலன்களை உள்ளடக்கக் கூடியதாகும். ஆனாலும் இது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த போதிலும் அதில் 2800 கொள்கலன்களே இருந்தன.

மேலும் இந்தளவு கொள்கலன்களை ஏற்றிய கப்பலொன்று பயணிப்பதற்கு 12.5 மீற்றர் கடல் ஆழமே போதுமானதாகும். அது மட்டுல்லாது 5000 கொள்கலன்களைக் கொண்ட கப்பல் பயணிப்பதற்கு இந்த கடல் ஆழம் தாராளமாக போதுமானது .ஆனால் பிரச்சினை அது அல்ல அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்கைப் பகுதியின் சுமார் 16 மீற்றர் ஆழத்தின் கீழ் பாரிய கற்பாறைகள் இருப்பதாக துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது அதனை அகற்றுவதற்கு பாரிய நிதி செலவாகும் என்றும் அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த துறைமுகம் அமைப்பதற்கு 6.3 வீத வட்டியிலேயே கடன் பெறப்பட்டிருக்கின்றது. எனவே இது நாட்டு மக்களின் பொதுப்பிரச்சினை என்பதால் இது குறித்து பேசுவதற்கும் விமர்சிப்பதற்கும் எதிர்கட்சி என்ற வகையில் எமக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன.

துறைமுக அதிகாரி சபையின் கூற்றின் பிரகாரமே ஐக்கிய தேசியக் கட்சி அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிலைமைகளை வெளிப்படுத்தி இருக்கின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கொள்கலன்களை ஏற்றி இறக்குவதற்கான வசதிகளோ அல்லது அங்கு கப்பல்கள் வருமிடத்து எரிபொருள் நிரப்பும் வசதி வாய்ப்புக்களோ இல்லை.

இந்நிலையில் வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய கப்பலொன்றை பணம் செலவிட்டு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வந்து கண்காட்சி நடத்தியிருக்கின்ற அரசாங்கம் மக்களை மடையர்களாக்க முயற்சிக்கின்றது.

எமது நாடு அபிவிருத்தியடைவதற்கும், தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் தடையாக நிற்பதில்லை. ஆனாலும் மக்களை ஏமாற்றுவதைப் பார்த்து கொண்டிருக்க முடியாது.

அம்பாந்தோட்டை துறைமுகம் என்ற பெயரில் அரசாங்கம் எவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றது என்பதற்கான சகல ஆதாரங்களும் இருக்கின்றன அவற்றை எதிர்வரும் மூன்றாம் திகதி வெளிப்படுத்துவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக