30 ஏப்ரல், 2011

மேதின பாதுகாப்பு கடமையில் 8 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுவர்

மே தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புக் கடமைகளுக்கென எண்ணாயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் அவர்களில் ஐயாயிரம் பேர் தலைநகரில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் 11 மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளதாலேயே தலைநகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் இராணுவத்தின் உதவியும் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது , நாட்டில் சுமுகமானதும் அமைதியானதுமான ஒரு சூழல் காணப்படுவதால் மேதின நிழ்வுகளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வார்கள். ஆகையினால் அவர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கவேண்டியுள்ளது.

மே தின நிகழ்வில் கலந்து கொள்ளும் கட்சி ஆதரவாளர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது கூட்டங்கள் ஊர்வலங்களை முன்னெடுக்கும் அதே வேளை, குழப்பங்களை ஏற்படுத்தாமல் செயற்பட வேண்டும்.

மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருபவர்களின் நலன் கருதி மே தின நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன தரிப்பிட வசதிகள் மற்றும் மக்கள் தொடர்பாடல் மையம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களின் போது தமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் காணாமற்போனால் பொலிஸ் நடமாடும் தகவல் மையத்தில் அறிவிக்கலாம். மே தின நிகழ்வுகள் நடைபெறும் சகல பகுதிகளிலும் இந்த பொலிஸ் நடமாடும் மக்கள் தொடர்பு மையங்கள் செயற்படும். _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக