8 பிப்ரவரி, 2011

பாதிக்கப்பட்ட 10,000 வீடுகளை மீளமைத்து கொடுக்க அரசு தீர்மானம்


வெள்ளத்தினாலும், மண்சரிவுகளினாலும் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களிலுல் முற்றாக 1161 வீடுகளும் அரைவாசியாக 8012 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இவ் வீடுகளை மீள நிர்மாணித்துக் கொடுப்பதற்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மேற்கண்டவாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல்வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

மேற்படி விடயமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, அநுராதபுரம், பொலநறுவை, நுவரெலியா, மாத்தளை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள சகல வீடமைப்பு மாவட்ட முகாமையாளர்களும் இப்பகுதிகளிலும் சேவையாற்றும் 120 வீடமைப்பு அலுவலர்களும் உடனடியாகக் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (08 திகதி) பி.ப. 02.00 மணிக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச தலைமையில் கொழும்பு சவ்சிரிபாயவில் நடைபெறும் மாநாட்டில் இவர்கள் பங்குபற்றுவார்கள்.

இக்கூட்டத்தில் சேதமடைந்த வீடுகளை உடன் மீள் நிர்மாணிப்பதற்காக உடனடி தீர்மானங்களை எடுத்து அவை நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் கூறினார்.

இக்கூட்டத்தில் மேற்படி மாவட்டங்களில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கணக்கெடுக்கப்பட்ட சேதமடைந்த வீடுகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் உரிய நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும். தற்பொழுது வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபா பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றது. மேலதிக நிதியை திறைசேரி மூலம் பெற்று பாதிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக நிர்மாணிக்க வீடமைப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்படும்.

இத்திட்டத்திற்காக இந்த நாட்டில் நிர்மாணப்பணிகளில் உள்ள கம்பனிகள் மற்றும் நன்நோக்கு நிறுவனங்கள் உரிய கட்டடப் பொருட்களையோ நிதி உதவிகளையோ அன்பளிப்பாக வழங்க முடியும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக