12 டிசம்பர், 2010

வடக்கில் சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இடவசதி இல்லை: இலங்கை ஆசிரியர் சங்கம்

இம்மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வடபகுதி மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாத நிலை காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து அரசின் கவனத்தையும் கோரியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டெலின் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

திருமுருகண்டி வித்தியாலயம், வன்னி உயிலங்குளம் வித்தியாலயம் மாங்குளம் வித்தியாலயம் ,பெரிய புளியங்குளம் வித்தியாலயம், ஒலுமடு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்தகைய ஒரு தேசிய பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு அடிப்படை உட்கட்டமைப்புகள் கூட இல்லாத மிக மோசமான நிலையை எதிர்நோக்குகின்றார்கள்.

வன்னி மாங்குளம் வித்தியாலயம் திருத்தியமைக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் இன்னமுமே திருப்தியளிக்கக்கூடிய நிலைமை வந்தடையவில்லை. தற்போது நிலவும் காலநிலை இவர்களுக்கு இன்னொரு இடைஞ்சலாக அமையவிருக்கின்றது. இத்தகைய மண்டபங்களில் பரீட்சை எழுத முற்பட்டால் மாணவர்கள் நனைந்து பெரும் அல்லலுற நேரும் என்றும் தெரிவித்தார் ஜோசப் ஸ்டெலின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக