12 டிசம்பர், 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மனமாற்றம் வரவேற்கத்தக்கது

வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்காமல் இருப்பதற்கான முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தமையானது அவர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விட்டனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த முடிவை அவர்கள் எப்போதோ எடுத்திருக்கலாம். எனினும் காலம் கடந்தேனும் அவர்கள் எடுத்திருக்கும் இம்முடிவு தமிழ் மக்களுக்கு நிச்சயம் மன நிறைவைக் கொடுக்கும். கல்வியில் ஆரம்பித்து காணிப் போராட்டமாக மாறி, இறுதியில் கொடிய யுத்தமாக மாறிய தமிழரின் போராட்டம் முப்பது வருடங்களைக் கடந்தும் முழுமையாக முடங்கிய நிலையிலேயே முடிவுற்றது.

கற்றறிந்த சீமான்கள் அங்கம் வகித்த சுதந்திரத்தின் பின்னரான அன்றைய தமிழ் அரசியல் கட்சிகள் அன்றே சிங்கள அரசுகளுடன் முறையாக இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தால் போராட்டம், யுத்தம், உயிரழிவு, சொத்தழிவு என்பன தடுக்கப்பட்டிருக்கலாம். இவை தமிழருக்கு மட்டுமல்ல சிங்கள இராணுவத்தினருக்கும், சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், அத்துடன் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளையும் தடுத்திருக்கும்.

தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்து அழிவைச் சுமந்து நிற்கும் இன்றைய நிலையிலும் புலம்பெயர் சமூகமும், பாதிப்பு எதுவுமே ஏற்படாது உல்லாசமாக ஆங்கிலம் பேசிவரும் தமிழ்ச் சமூகமும் திருந்தவில்லை. லண்டன் ஆர்ப்பாட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டான அபகீர்த்தி.

புலிகளால் பயம், பாதிப்பு, இழப்பு, தவிப்பு என்பவற்றுக்கெல்லாம் முகங்கொடுக்க வைத்து வெறுங்கையுடன் தப்பியோடி வந்துள்ள மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை ஆதரித்து இழந்தவற்றை மீளப்பெறுவதே புத்திசாலித்தனம்.

இழந்ததற்கும் மேலாக தர நினைக்கும் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு பணியாற்றுவதே பரிதவித்து நிற்கும் வன்னித் தமிழ் மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்பேசும் சமூகத்திற்கும் நாம் செய்யக்கூடிய ஒரேயொரு கைமாறாகும். அந்த வகையில் தமிழ்க் கூட்டமைப்பின் மனமாற்றம் பாராட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக