12 டிசம்பர், 2010

இறுதிப் போர் குறித்த சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் 19 பேர் வலியுறுத்து


இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு சுயாதீன, சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்துமாறு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற போர்க் குற்றங்களுக்கு மூலகாரணமானவர்கள் நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா உள்ளடங்கலாக மிக முக்கிய நபர்கள் என்பதை அமெரிக்க ராஜதந்திரிகள் அறிந்துவைத்துள்ளதாக கடந்த வாரம் விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், 19 செனட்டர்கள் இவ்வாறு கடிதம் எழுதி சர்வதேச விசாரணையை வலியுறுத்துமாறு கேட்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் காங்கிரஸின் 58 உறுப்பினர்கள் சேர்ந்து இவ்வாறான ஒரு கடிதம் எழுதி ஒபாமா நிர்வாகம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டிருந்தனர். அதையடுத்து இக்கடிதமும் இப்போது அதையே வலியுறுத்துகிறது. மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றிய 300 சம்பவங்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தின் போர்க் குற்ற அறிக்கையிலும், ஒக்ரோபர் மாதத்தில் இராஜாங்கத் திணைக்கள அறிக்கையிலும் விரிவாகக் கூறப் பட்டுள்ளன என்பதையும் இக்கடிதம் ஹிலாரிக்குச் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இலங்கை இதுவரை காலமும் அமைத்த பல்வேறு விசாரணைக் குழுக்களும் வெற்றிகரமான விசாரணைகளைச் செய்ய வில்லை என்பதையும், மனித உரிமைகள் கண் காணிப்பகமும், சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் இலங்கையின் ஆணைக்குழுக்கள் குறித்த நம்பகத்தன்மை கேள்விக்கிடமானதே என்று கூறியுள்ளதையும், அவர்களும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ளதையும் செனட்டர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுக்காட் டியுள்ளனர். சமாதானத்தைக் கொண்டுவரும் முயற்சிகளில் வரலாறானது தோல்விகள் நிறைந்ததாகவே உள்ளது.

பெரும்பாலான பிரச்சனைகள் இப்போதும் கூட தொடர்ந்து நீடிக்கின்றன என்று செனட்டர்கள் தமது கடிதத்தில் எச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக