நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 27 நாட்களாக நடத்தப்பட்ட பாரிய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 12,030 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
கடந்த மாதம் 13ம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 27 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 12,500 சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின்போது 10, 306 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின்போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட்களையே பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆயிரக் கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் விஷேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘போதை ஒழிப்பு, திட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஹெரோயினுடன் தொடர்புடைய 3275 சம்பவங்கள் தொடர்பாகவும், கஞ்சாவுடன் தொடர்புடைய 7596 சம்பவங்கள் தொடர்பாகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்கிஸ்ஸையிலுள்ள படோவிட்ட, கிரேண்ட் பாஸிலுள்ள கிம்புலாஎல, பொரல்லையிலுள்ள மகஸின் வீதி, பண்டாரநாயக்க வீதி, ஒபேசேகரபுர மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலேயே விஷேட பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர் என்றார். போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் வரை இந்த பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக