10 நவம்பர், 2010

சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து: ஐ.தே.க

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம். எனவே அவரின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும். சிறைச்சாலையிலிருந்து பொன்சேகாவை நீதிமன்றம் கொண்டு செல்கையிலும் நீதிமன்ற வளாகத்திலும் சிறைச்சாலைக்குள்ளும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதமானது பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன்போது சரத் பொன்சேகாவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்புக்கூறுவது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றது. இந்த நிலையில் பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் சிறைச்சாலையை சோதனையிட சென்றிருந்தால் ஏன் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை? சிறைச்சாலை அதிகாரிகள் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டதா? ஆனால் பொலிஸார் சோதனையிட செல்வது சிறைக் கைதிகளுக்கு தெரிந்துவிட்டது. இது எவ்வாறு என்று கேள்வியெழுப்புகின்றோம்.

ஆனால் நாங்கள் ஒரு விடயத்தை வலியுறுத்துகின்றோம். அதாவது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையிலேயே வைக்கப்பட்டுள்ளார். அவர் தங்கியுள்ள கூடத்துககு நானும் சென்றிருந்தேன். அங்கு அவருக்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. ஒரு அதிகாரி இருக்கின்றார். 60 பொலிஸார் சென்ற வேளையிலேயே பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டுள்ள நிலையில் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு கூறுவது? என அவர் கேள்வியெழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக