27 அக்டோபர், 2010

தமிழக மீனவர்மீது இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர்களை மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதோடு, வலைகளையும் வெட்டி வீசியுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த மீனவர்களுக்கான கூட்டத்தில், கடற்படை கமாண்டர் அகர்வால், "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கமாட்டார்கள்" என உறுதியளித்தார்.

இதனிடையே மண்டபம் பகுதியிலிருந்து 200க்கும் அதிகமான விசைப் படகுகள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று, நேற்று கரை திரும்பின. இதில் சில படகுகளில் சென்றவர்கள், கச்சத்தீவுப் பகுதியில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், படகை சுற்றி வளைத்து, மீனவர்களை தாக்கினர். ஆல்பர்ட் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கென்னடி, பெரியதுரை என்பவரது விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்.

மீனவர்கள் கூறுகையில்,

"ரோந்து படகில் வந்த இலங்கைக் கடற்படையினர், "இப்பகுதிக்கு ஏன் வந்தீர்கள்?" எனக் கேட்டுத் தாக்கினர்.

பிற படகிலிருந்த வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்'' என்றனர்.

தமிழக மீனவர்களைத் தாம் தாக்கவில்லை என இலங்கைக் கடற்படை ஒருபுறம் கூறி வந்தாலும், மறுபுறம் அவர்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக