27 அக்டோபர், 2010

நாட்டில் தினமும் 250க்கு மேற்பட்டோர் பக்கவாதத்தால் உயிரிழப்பு : டாக்டர் மஹிபால

இலங்கையில் தினமும் 250 மேற்பட்டோர் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாகவும் தினமும் 55 பேர் இதனால் பீடிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் பாலித்த மஹிபால தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் அக்டோபர் 29 ஆம் திகதி உலக பக்கவாத தினமாகும். இதனை முன்னிட்டு இன்று 26 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மஹிபால இக்கருத்தை தெரிவித்தார்.

மேலும் மூளைக்கான இரத்த விநியோகத்தில் தடை ஏற்படுவதன் காரணமாகவே பக்கவாதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாக மூளையின் பாதிக்கப்பட்ட பகுதி செயற்படமுடியாமல் போவதுடன் உடம்பின் எலும்புகளையும் செயலிழக்கச்செய்யும். புரிந்து கொள்ள, பேச, பார்க்க முடியாமல் போதல் ஆகியவையும் ஏற்படும்.

உலகில் அதிக மரணத்தினை ஏற்படுத்தும் முன்னணி காரணியாக பக்கவாதம் உள்ளதாகவும் மாரடைப்பே அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோயாக தற்போது விளங்குவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கமைய உலகில் 69 நிமிடங்களுக்கொருவர் பக்கவாத நோயில் இறப்பதாகவும் வருடாந்தம் இத்தொகை 5.7 மில்லியனாக உள்ளதெனவும் டாக்டர் லங்கா ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

நோயாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு 3 மணித்தியாலங்களுக்குள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டால் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியுமெனவும் இதற்கென கொழும்பு வைத்தியசாலையில் சிறப்புப் பிரிவு உள்ளதாகவும் நரம்பியல் டாக்டர் பத்மா குணரத்ன தெரிவிக்கின்றார்.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளைத் தவிர்த்தல், புகைத்தலை தவிர்த்தல், நீரிழிவைக் கட்டுப்படுத்தல், உடல் நிறையைக் கட்டுப்படுத்தல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவை மூலம் இதனைத் தடுக்கமுடியும் எனவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக