14 அக்டோபர், 2010

விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது பற்றி ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு


எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு செயற் குழுவின் அமர்விற்குத் தலைமை தாங்கி கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரத்னசிறி விக்கிரமநாயக்க, ராஜித சேனாரத்ன, தினேஷ் குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன, காமினி லொகுகே ஆகியோருடன் அமைச்சின் செயலாளர்கள் உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில்:-

தேசிய நெல் உற்பத்தி உள்ளிட்ட சகல விவசாய உற்பத்தி மேம்படுத்தலின் போதும் சர்வதேச சந்தைவாய்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சில காலம் கைவிடப்பட்ட நிலையிலிருந்த விவசாய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வசதிகளைச் செய்துள் ளது.

இதன்மூலம் விவசாயிகளுக்குத் தெளிவூட்டி நிரந்தரமான அபிவிருத்திக்கு விவசாயத்துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதும் முக்கியமாகும்.

முதலீட்டு சபையின் வரி மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து தோசைக்கடைகள் மற்றும் சனீஸ் ரெஸ்டூரன்களைக் கட்டியெழுப்பிய யுகத்தை நினைவுபடுத்திய ஜனாதிபதி, இனிமேலும் அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி, முட்டை உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க இடமளிக்கக் கூடாது எனவும் அவர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக