14 அக்டோபர், 2010

வடக்கில் அதிகளவு தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: எம்.சரவணானந்தன்

வடக்கில் அதிகளவு தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் அபிவிருத்தி நிறுவனமொன்றின் முன்னணி ஆய்வாளர் முத்துகிருஸ்ணன் சரவணானந்தன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விவசாயத் துறையில் அதிகளவு முதலீடுகள் அவசியப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

25 ஆண்டு காலமாக தங்கி வாழும் மனோ நிலையைக் கொண்டுள்ள மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு உடனடியாக தனியார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உதவிகளை நம்பியே யுத்த பிரதேச மக்கள் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையில் உடனடி மாற்றம் அவசியம் எனவும், மக்களின் வாழ்வதாரத்தை வலுப்படுத்தி அவர்களின் வருமான வழிகளை ஸ்திரப்படுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய முறையில் தனியார் முதலீடுகள் மேற்கொள்ளபடாவிட்டால் வன்னி தொடர்ந்தும் பயனற்ற பிரதேசமாக ஒதுக்கப்பட்டுவிடக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார். வன்னிப் பொருளாதாரத்தில் அரசாங்க மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணப் புழக்கமே அதிகளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயம் கைத்தொழில் போன்ற துறைகளுக்கான பங்களிப்பு 20 வீதமாகவே காணப்படுகின்றதென தெரிவித்துள்ளார்.

வன்னிப் பிரதேசத்தின் சனத் தொகைப் பரம்பல் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும், ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 70 நபர்கள் என்ற ரீதியில் சனத்தொகைப் பரம்பல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீள் குடியேற்றப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எந்த வகையிலும் போதுமானதல்ல என பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக