7 அக்டோபர், 2010

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிப்போருக்கு தொடர்ந்து வீடமைப்பு நிதி

இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழும் வட பகுதி மக்கள் மீளக் குடியேறிய போதிலும் அவர்களுக்கு உலக வங்கியினூடாக வழங்கப்படும் வீடமைப்புக்கான நிதி உதவி தொடர்ந்தும் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கூறினார். இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வாய்மூல விடைக்காக நூர்தீன் மசூர் எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:- வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள மக்களுக்காக உலக வங்கி வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 4460 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதில் 2218 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 778 வீடுகள் திருத்தப்பட்டு வருகின்றன. அதில் 314 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

புதிதாக வீடு கட்ட 3,25,000 ரூபாவும் வீடுகளை திருத்தியமைக்க ஒரு இலட்சமும் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது.

2006 ஆய்வுகளின்படி நலன்புரி நிலையங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக 50 ஆயிரம் ரூபாவும் 2ஆம் கட்டமாக 60 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதன் போது குறுக்கீடு செய்த நூர்தீன் மசூர் எம். பி. புத்தளத்தில் உள்ள வடபகுதி மக்கள் மன்னாரில் மீள்குடியேறி வருவதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து வீட்டு உதவி வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வடபகுதி மக்கள் மீள்குடியேறிய போதும் அவர்களுக்கு வீட்டுக்கடன் தொடர்ந்து வழங்கப்படுமென அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக