24 மே, 2010

இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 19-05-2010 புதன்கிழமை ஆட்சிக்குழு உறுப்பினர் டபிள்யூ. எஸ். செந்தில்நாதனின் தலைமையில் நடைபெற்ற அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் சட்டத்தரணி யசோதரா கதிர்காமத்தம்பி “இந்தியாவிலுள்ள புலம்பெயர் இலம்பாடுடையேர்க்கான உதவிகளும் உரிமைகளும்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இவர் 1999ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைக் கல்வியை முடித்த பின் பங்களூர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றார். சட்டத்தரணி யசோதரா ஆற்றிய உரையின் சுருக்கம்)

2007- 2009 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் பங்களூரில் பயின்ற போது இறுதி அரையாண்டு ஆய்வுக்கு நான் எடுத்துக் கொண்ட தலைப்பு மனித உரிமைகள் பற்றியதாகும்.

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பங்களூரில் இருந்தபடியால் அந்த மக்கள் பற்றி நேரடியாக சென்று ஆராய முடிந்தது. புலம்பெயர்ந்த மக்களை அகதிகள் என்று சொல்வது அவர்களைப் புண்படுத்துவது போல் இருக்குமென்று பலரும் கருதியதால் ‘இலம்பாடுடையோர்’ என்ற சொல்லை இங்கே பிரயோகிக்கின்றேன்.

இந்தியாவில் மனித நேயம்...

இலம்பாடுடையோர்க்கான சட்ட அந்தஸ்து என்ன? மனித உரிமைகள் பற்றிய கருத்துருவம் மேலைத்தேசத்தில் தான் தோற்றம் பெற்றதென்ற ஒரு கருத்துண்டு. பாரதத்தில் புராண, உபநிடத காலங்களிலிருந்தே இக் கருத்துருவம் நடைமுறையிலிருந்து வந்துள்ளது. நாம் ஒருவரையொருவர் நண்பனாக உற்று நோக்குவோம். அப்போது தான் மனித நேயம் வளரும் என்று யசுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

இலம்பாடுடையோருக்கு எவ்வாறு உதவலாம் என மேலைத்தேசங்களில் சிந்தித்தனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இது ஆவணவடிவமாகக் கொண்டுவரப்பட்டது. 1955ம் ஆண்டு இது பற்றிய நிறுவன ரீதியான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

இலங்கையிலிருந்த புலம்பெயர்ந்த இலம்பாடுடையோருக்கான இந்தியாவின் பங்கு, கடப்பாடு என்ன? பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவுக்கு அதாவது 1983ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டம் அடைந்தது வரை தமிழ் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இவர்களின் நிலை என்ன? இவர்களுள் பலர் 1983ம்ஆண்டு சென்ற போதிருந்த அதே நிலையில்தான் இன்னும் உள்ளனர். சிறுவர்கள் நிலை என்ன? பெண்கள் நிலை என்ன? இவர்களுக்கென தமிழ்நாட்டில் இதுவரை எதுவித விசேட சட்டமும் ஆக்கப்படவில்லையா? கிட்டத்தட்ட 120000 க்கு மேற்பட்ட மக்கள் பல முகாம்களிலும் பரந்து காணப்படுகின்றனர்.

உதவி, உரிமை

இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி, உரிமைகளை நோக்கும் போது சிறுவர்களுக்கென ஒரு தொகையும் நடுத்தர வயதினருக்கு ஒரு தொகையும் வளர்ந்தோருக்கு ரூபா 280ம் வழங்கப்படுகிறது. மானிய அடிப்படையில் அரிசி, மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சமையல் உபகரணம் வழங்கப்படுகின்றது.

முதலாவது பிரிவில் ஒரு குடும்பம் தங்க சிறிய அறை. இரண்டாவது தலா 100 குடும்பங்களை தங்கவைக்க ஒரு மண்டபம், அடுத்ததாக அரசியல் ஈடுபாடு கொண்டோரைத் தங்க வைக்கும் விசேட முகாம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள்

மகப்பேற்றுத் திட்டம் உண்டு. சிறுவர் பராமரிப்புத் திட்டமும் உண்டு. நடமாடும் உரிமைக்குக் கட்டுப்பாடுண்டு. முன் அனுமதி பெற்றே வெளியிடங்களுக்குச் சென்று வர முடியும். இவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் நாளாந்த தேவைக்கு போதுமா? இல்லை.

இதற்குரிய மாற்றுவழி என்ன? அரசாங்க தொழிலைத் தவிர தொழில் செய்யும் உரிமை உண்டு. கூலித் தொழிலாளர்களாகத்தான் அநேகர் வேலை செய்கின்றனர். முதலாளிமாரின் தொழில் சுரண்டலுண்டு. இதைத்தடுக்க சட்டம் இல்லை. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் மு.

கருணாநிதி அவர்கள் ஒரு முறை அறிவித்திருந்தார்.அது அறிவித்தலுடன் நின்றுவிட்டது. இந்த நிலையில் புலம்பெயர்ந்த இலம்பாடுடையோர் தமது நாட்டுக்கு திரும்புவதுதான் வினைத்திறனுடையதாகவிருக்கும். 1987ல் ஒரு சுமூக நிலை ஏற்பட்ட போது சுமார் 40000 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்படும் போது அரசுகளின் அறிக்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் சரியான அறிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலம்பாடுடையோருக்கான தூதுவராலயம் மக்களின் விருப்பத்தைப் பெற வேண்டும். இதன் பின்னரே திருப்பி அனுப்பப்படலாம்.

1991ம்ஆண்டு பங்களூரில் இந்திராகாந்தி கல்லூரியில் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை அனைவரும் அறிவர். அப்பாடசாலைக்கு நான் நேரில் சென்று பார்த்தேன். ஒரு அறையில் 32 பிள்ளைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலம், கன்னடம், தமிழ் மொழி மூலம் கல்வி போதிக்கப்படுகின்றது. சிறுபிள்ளைகளை விட்டு விட்டு பெற்றோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.

மனித உரிமைகள் என்னும் போது சிறுவர் பெண்கள் என ஏன் வித்தியாசம் காட்ட வேண்டும்? அது எல்லோருக்கும் பொதுவானது.

மாற்றாந்தாய் மனப்பாங்கு....

இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கும் திபேத்திலிருந்து வந்தவர்களுக்குமிடையில் பாரிய வேறுபாடுண்டு. திபேத்தியர் தமது நாட்டிலிருந்தது போலவே ஒரு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களுக்கென தொழிற்சாலைகள், விவசாயம் செய்யவென பல ஏக்கர் காணி என்பன வழங்கப்பட்டுள்ளன. தமது கலாசாரத்தை அப்படியே பேணி வருகிறார்கள்.

ஆனால் எமது மக்களின் கலாசாரம் மாற்றமடைகிறது. சினிமா மோகம் அதிகம். நடிப்பவர்கள் போன்ற நடை உடையை பின்பற்றும் ஆசை காணப்படுகிறது. கலாசாரத்தில் பாரிய மாற்றம் இல்லாவிட்டாலும் சில தவிர்க்கமுடியாமலுள்ளன. இவ்வளவு பெருந் தொகையான மக்களை 27 வருடம் வைத்துக் காப்பாற்றுவது என்பது ஒரு பெரிய விடயம்தான்.

பெற்றோர் மீண்டும் தாயகம் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் அங்கு பிறந்து வளர்ந்தவர்கள் திரும்பி வர விரும்புகின்றார்களில்லை. தமிழ் நாடு அரசு நிதி உதவியை அதிகரித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவுகின்றன.

கல்வி வசதி

எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த வேளை புலம்பெயர்ந்த மாணவர்கள் வைத்தியத்துறையில் பயில ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் அது கைவிடப்பட்டுள்ளது. பிளஸ் யியி (ஜிங்சீஙூ யியி) வரை எல்லோரும் இலவசமாகப் படிக்கலாம். ஆனால் அதனால் பயன் இல்லையென்று அதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

தீர்வு

தமிழக அரசு சட்ட ரீதியான அந்தஸ்து எதுவும் வழங்கப்படாத போதும் நிர்வாக ரீதியான சில நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இலங்கை அரசுக்கு தமது மக்கள் பற்றிய ஒரு கடப்பாடு உண்டு. இரு நாடுகளும் இணைந்து ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். பிரஜாவுரிமை வழங்குவதா? திருப்பியனுப்புவதா? என சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக