24 மே, 2010

பிரிட்டனில் தமிழரை கொன்ற மூன்று பேருக்கு சிறை தண்டனை

லண்டன் : பிரிட்டனில் தமிழரை கொலை செய்த மூன்று பேருக்கு தலா ஒன்பதாண்டு காலம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் நார்போக் பகுதியில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தவர் சரவணகுமார் செல்லப்பன்(24). கடந்த ஆண்டு அக்டோபரில் பெட்ரோல் பங்க்கில் வேலை முடித்து திரும்பி கொண்டிருந்த செல்லப்பனை ஆர்மீனியாவைச் சேர்ந்த சேம்டோவ்(18) ஈரான் நாட்டைச் சேர்ந்த ஜெகீர் அகமதி(20) அவாத் முராதி(18) ஆகியோர் சூழ்ந்து கொண்டு அவரிடமிருந்த, "பிளாக்பெர்ரி' ரக மொபைல்போனை பறிக்க முயன்றனர்.

இதை தரமறுத்ததால் அவரை கண்மூடித்தனமாக அடித்து போட்டு விட்டு மூவரும் ஓடிவிட்டனர். இந்த மொபைல் போனை விற்று கோழிக்கறி வாங்கி சாப்பிட்டுள்ளனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பிய செல்லப்பன் தன் பெற்றோரிடம், படிகட்டில் இருந்து விழுந்து விட்டதாக கூறியுள்ளார். தான் தாக்கப்பட்ட விஷயத்தை போலீசில் தெரிவிக்கவில்லை.

வீடு வந்து சேர்ந்த சில மணி நேரத்தில் செல்லப்பன் இறந்து விட்டார். பிரேத பரிசோதனையில் அவர் தலையில் பலத்த காயம் பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவர் தாக்கப்பட்ட இடத்தில் இருந்த ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்த்து போலீசார் மூவரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஈரான் மற்றும் ஆர்மீனிய இளைஞர்களுக்கு தலா ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மைக்கேல் மெட்இயர் தீர்ப்பு கூறினார். செல்லப்பன் அவரது பெற்றோருக்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக